Ad Code

Responsive Advertisement

பல் எனாமல் தேய்மானம் - நீங்கள் செய்யும் தவறுகள் இதுதான்!

 



நமது உடலில் உள்ள பாகங்களிலேயே மிகவும் உறுதியானது பற்களின் மேல் படலமான 'எனாமல்' (Enamel) தான். இது ஒரு கவசம் போல செயல்பட்டு, பற்களுக்கு உள்ளே இருக்கும் நரம்புகளையும் திசுக்களையும் பாதுகாக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த எனாமல் ஒருமுறை தேய்ந்துவிட்டால், அது மீண்டும் வளரக்கூடிய திசு கிடையாது.


இந்தியாவில் அண்மைக்காலமாக பல் வலி அல்லது சொத்தை என்பதை தாண்டி, எனாமல் தேய்மானத்தால் ஏற்படும் பற்கூச்சம் மற்றும் மஞ்சள் நிற மாற்றத்துடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


வேடிக்கை என்னவென்றால், நாம் பற்களை சுத்தமாக வைத்திருக்கிறோம் என்று நினைத்து செய்யும் சில 'அதிகப்படியான' அக்கறையான பழக்கங்களே, அந்த எனாமலை மெல்ல மெல்ல அரித்து விடுகின்றன. ஆரம்பத்தில் எந்த வலியும் தெரியாது என்றாலும் நாளடைவில், பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது அல்லது குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது ‘சுரீர்’ எனப் பற்கூச்சம் ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறியாகும்.


இதை எப்படி தடுப்பது? என்றால், பற்களை பாதுகாப்பது என்பது ஏதோ ஒரு கடினமான காரியம் இல்லை. நாம் செய்யும் மிகச்சிறிய தவறுகளை திருத்திக்கொண்டாலே போதும் என்கின்றனர் பல் மருத்துவர்கள். அந்த வகையில் நமது அன்றாட வாழ்வில் எனாமலை சிதைக்கும் பழக்கங்கள் மற்றும் அதனை எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம்.


பலமாக தேய்த்தால் பற்கள் மின்னும் என்ற தவறான எண்ணம்: பலர் பற்களை எவ்வளவு வேகமாக அல்லது பலமாகத் தேய்க்கிறோமோ, அவ்வளவு சுத்தமாகும் என்று நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறு. கடினமான பிரஷ்களை (Hard-bristles) பயன்படுத்துவதும், அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பதும் எனாமல் படலத்தில் நுணுக்கமான கீறல்களை உண்டாக்கும். காலப்போக்கில் இது எனாமலை மெலிதாக்கி, பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.


இதற்கு பதிலாக, மென்மையான பிரஷ்களை (Soft-bristle toothbrush) மட்டுமே பயன்படுத்தவும். வட்ட வடிவில் மென்மையாகத் தேய்க்கும் முறையைப் பின்பற்றவும். ஒரு நாளைக்கு இருமுறை, தலா இரண்டு நிமிடங்கள் தேய்ப்பதே போதுமானது.


அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள்: குளிர் பானங்கள், பாக்கெட் செய்யப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி டிரிங்க்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள் எனாமலுக்குப் பெரிய எதிரிகள். நாம் அடிக்கடி இது போன்ற பானங்களை உறிஞ்சிப் குடிக்கும்போது, பற்கள் நீண்ட நேரம் அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இது எனாமலை மென்மையாக்கி சிதைக்கத் தொடங்குகிறது.


அமிலத்தன்மை கொண்ட பானங்கள் அருந்துவதை நிறுத்தவும். அவற்றை பருகிய பிறகு உடனடியாக வாயை சுத்தமான நீரால் கொப்பளிக்கவும். முக்கியமாக, அமில உணவுகளை சாப்பிட்ட உடனே பல் துலக்கக் கூடாது, குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே துலக்க வேண்டும். இல்லையெனில், மென்மையாக இருக்கும் எனாமல் மேலும் பாதிப்படையும்.


பற்களைக் கடிக்கும் பழக்கம்: மன அழுத்தம் காரணமாகவோ அல்லது தூக்கத்திலோ பலருக்கு தெரியாமலேயே பற்களை ஒன்றோடொன்று சேர்த்து நறநறவென கடிக்கும் பழக்கம் இருக்கும். இந்த தொடர்ச்சியான உராய்வு எனாமலை தேய்த்து, பற்களை மழுங்கச் செய்யும். இதனால் பற்கள் உடையவோ அல்லது தேய்ந்து குட்டையாகவோ வாய்ப்புள்ளது.


உங்களுக்கு தாடை வலி அல்லது பற்களில் தேய்மானம் தெரிந்தால் பல் மருத்துவரை அணுகுங்கள். தூக்கத்தின் போது பற்களைப் பாதுகாக்க 'நைட் கார்டு' (Night guard) எனும் கவசத்தைப் பயன்படுத்தலாம்.


முறையற்ற பராமரிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை: பற்களை முறையாகத் துலக்காமல் விடுவதும், உணவுத் துகள்களை அகற்ற 'பிளாஸிங்' (Flossing) செய்யாமல் இருப்பதும் பற்களில் காரை (Plaque) படியச் செய்யும். இந்தத் தட்டில் உள்ள பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்து எனாமலைத் தாக்குகின்றன. மேலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் செல்லாதபோது, ஆரம்பக்கட்ட தேய்மானத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.


தினமும் இருமுறை பல் துலக்குவதோடு, பற்களுக்கு இடையில் உள்ள அழுக்குகளை அகற்ற பிளாஸிங் செய்யுங்கள். குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.


சிகிச்சைகள்: இன்று பலரும் பற்களை வெண்மையாக்க வீட்டிலேயே சில ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். தகுந்த ஆலோசனையின்றி அடிக்கடி 'பிளீச்சிங்' (Bleaching) செய்வதால், அதில் உள்ள வீரியமிக்க வேதிப்பொருட்கள் எனாமலை பலவீனப்படுத்தும். இது பற்களில் நிரந்தர கூச்சத்தை ஏற்படுத்தலாம்.


எனாமல் தேய்மானத்தை எப்படி தெரிந்து கொள்வது?

  • குளிர்ந்த அல்லது சூடான உணவுகளை உட்கொள்ளும்போது பற்கூச்சம் ஏற்படுதல்.
  • பற்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (உள்ளே இருக்கும் டென்டின் பகுதி தெரிவதால்).
  • பற்களின் ஓரங்கள் சொரசொரப்பாக அல்லது உடைந்திருப்பது போலத் தெரிதல்.
  • அடிக்கடி பற்களில் சொத்தை ஏற்படுதல்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement