கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடல் சந்திக்கப்போகும் மாற்றங்கள் பலவிதம். அதில் மிக முக்கியமானதும், பிரசவத்திற்குப் பிறகும் நீடிக்கக்கூடியதுமான ஒரு விஷயம் இந்த 'ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்' எனப்படும் சருமத் தழும்புகள். 50% முதல் 90 சதவீத கர்ப்பிணிகளுக்கு இந்த ஸ்டிரெட்ச் மார்க் ஏற்படுவதாக NIH ஆய்வில் தெரியவந்துள்ளது.
கருப்பையில் குழந்தை வளர வளர, வயிற்றுப் பகுதியின் சருமம் குறுகிய காலத்தில் அதிகப்படியான விரிவடைதலுக்கு உள்ளாகிறது. நம் சருமத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் இழுவை திறன் (Elasticity) இருக்கும். அந்த எல்லையை தாண்டி சருமம் விரியும் போது, தோலின் உட்புற திசுக்களில் ஏற்படும் மெல்லிய கிழிசல்களே கோடுகளாக தெரிகின்றன.
ஆரம்பத்தில் இவை சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் கோடுகளாக தோன்றி, பிரசவத்திற்கு பிறகு மெல்ல மெல்ல நிறம் மாறி தென்படும். இது ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலையும் தராது என்றாலும், பல பெண்களுக்கு இது ஒரு பெரிய கவலையாகவும், தர்மசங்கடமாகவும் இருக்கிறது.
"இவை மறைந்து பழையபடி சருமம் மாறுமா?" என்கிற கேள்வி எப்போதும் உண்டு. மரபணு ரீதியாக சிலருக்கு தழும்புகள் அதிகமாக விழ வாய்ப்பிருந்தாலும், சரியான பராமரிப்பு முறைகளை கையாளுவதன் மூலம் அதன் தீவிரத்தை குறைக்க முடியும். இதனை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், வராமல் தடுக்கவும், வந்த பிறகு குறைக்கவும் பல வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தினசரி எண்ணெய் மசாஜ் உண்மையில் உதவுமா? கர்ப்ப காலத்தில் தினமும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது என்பது ஒரு பழமையான முறை என்றாலும், அதில் அறிவியல் ரீதியான பயன்கள் அதிகம் உள்ளன. தினமும் குளிப்பதற்கு முன்போ அல்லது உறங்குவதற்கு முன்போ தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு வயிற்றுப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யும் போது, அந்த இடத்திலுள்ள ரத்த ஓட்டம் சீராகிறது.
முக்கியமாக, சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும் போது மட்டுமே அதன் நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்படும்.வறண்ட சருமத்தில் தான் விரிசல்கள் மிக எளிதாகவும் ஆழமாகவும் விழும். தொடர்ந்து எண்ணெய் மசாஜ் செய்யும் போது, வயிறு விரிவடையும் வேகத்திற்கு ஏற்ப சருமம் வறட்சியடையாமல் ஒத்துழைக்கும்.
இது தழும்புகள் வருவதை 100 சதவீதம் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது, ஆனால் அவை ஆழமான வடுக்களாக மாறாமல் தடுத்து, மிக மெல்லிய கோடுகளாக மட்டுமே இருக்க உதவும்.
குழந்தை பிறந்த பிறகு இந்தத் தழும்புகள் மறைந்துவிடுமா? குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு திரும்பும் போது, இந்தத் தழும்புகள் உடனடியாக மாயமாய் மறைந்துவிடாது. ஆரம்பத்தில் இவை சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் பளிச்சென்று தெரியும். ஆனால் காலம் செல்ல செல்ல, அதாவது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள், இந்த நிறம் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கும்.
உங்கள் சருமத்தின் நிறத்திலேயே அவை மாறிவிடும் என்பதால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது பெரிய அளவில் தெரியாது. பல பெண்களுக்கு இவை நிரந்தரமாக இருந்தாலும், அவை மிகவும் மெல்லிய கோடுகளாகவே எஞ்சியிருக்கும். இது முற்றிலும் உடலின் தன்மை மற்றும் நீங்கள் எடுக்கும் பராமரிப்பைப் பொறுத்தது.
தழும்புகளைக் குறைக்கச் செய்ய செய்வது? தழும்புகளை குறைப்பதற்கு வெளிப்புற பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நாம் உட்கொள்ளும் உணவும் நீச்சத்தும். உங்கள் சருமம் உள்ளிருந்து ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே தழும்புகளைத் தவிர்க்க முடியும். இதற்கு நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தண்ணீர் குறைவாகக் குடிக்கும் போது சருமம் தன் மென்மையை இழந்து சீக்கிரம் விரிசல்களைச் சந்திக்கும். அதேபோல், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் பாதாம் போன்ற வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் சருமத்தில் உள்ள கொலாஜன் எனும் புரதத்தை அதிகரிக்கச் செய்யும். இது சருமத்தை இறுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் என்கிறது American Pregnancy Association ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரை.
குறிப்பாக, தழும்புகள் ஏற்படும் இடங்களில் அரிப்பு எடுக்கும் போது நகங்களால் சொறிவதைத் தவிர்க்க வேண்டும். நகக்கண்கள் படும் போது அந்தத் தழும்புகள் காயங்களாக மாறி நிரந்தரத் தழும்புகளாக மாறிவிடும். அரிப்பு ஏற்படும் சமயங்களில் ஈரப்பதம் மிக்க கிரீம்களைத் தடவுவது அல்லது மென்மையான பருத்தித் துணியால் வருடி விடுவது மட்டுமே சரியான தீர்வாகும்.

0 Comments