Ad Code

Responsive Advertisement

சர்க்கரை நோயாளிகள் வாகனம் ஓட்டினால் சிக்கலா? ஆய்வு சொல்லும் எச்சரிக்கை தகவல்!




சர்க்கரை நோய் (நீரிழிவு) பாதிப்பு ஏற்பட்டால் கண் பார்வை மங்குவது, சிறுநீரகப் பிரச்சனைகள், இதய பாதிப்புகள் மற்றும் உடலில் காயங்கள் ஆறாமல் இருப்பது போன்ற விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி நம்மில் பலருக்கும் ஓரளவுக்கு தெரியும். ஆனால், சர்க்கரை நோயால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு ஒருவர் வாகனம் ஓட்டும் திறனையே, குறிப்பாக வாகனத்தின் பெடல்களை கட்டுப்படுத்தும் திறனை பெருமளவு பாதிக்கக்கூடும் என்பதை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள்.

நாம் வாகனம் ஓட்டும்போது கீழே கால்களை பார்க்காமலேயே, பிரேக் எங்கே இருக்கிறது, ஆக்ஸிலரேட்டர் எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்து சரியான பெடலை மிதிக்கிறோம். இந்த இயல்பான திறனையே சர்க்கரை நோயால் வரும் நரம்பு பாதிப்பு மெல்ல மெல்லப் பறித்துவிடுகிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது

நரம்பு பாதிப்பும் ஓட்டுநர் சந்திக்கும் குழப்பமும்

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் ஏற்படும் நரம்பு பாதிப்பை மருத்துவ உலகில் 'டயபடிக் பெரிஃபெரல் நியூரோபதி' (Diabetic Peripheral Neuropathy) என்று அழைக்கிறார்கள். இது சர்க்கரை நோயாளிகளில் பாதியளவு பேருக்கு ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பாதிப்பாகும். பாதங்கள் மற்றும் கால்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால், உணர்வின்மை, மரத்துப்போதல், எரிச்சல் அல்லது ஊசியால் குத்துவது போன்ற உணர்வுகள் உண்டாகும்.

இந்த நரம்பு பாதிப்பு தீவிரமடையும் போது, பாதங்களில் அழுத்தம் மற்றும் பொருள்களின் தொடு உணர்வை அறியும் திறன் குறைகிறது. இதில் மிகவும் கவலைக்கடமான விஷயம் என்னவென்றால், நரம்பு பாதிப்பு உள்ளவர்களில் பாதிப்பேருக்கு தங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தொடக்கத்தில் தெரியாமல் இருப்பதுதான்.


சர்க்கரை நோய் நரம்பு பாதிப்பு உள்ளவர்களிடம் வாகனம் ஓட்டும் திறனை சோதிக்க, ஓட்டுநர் உரிமம் பெற்ற 44 பேரை கொண்டு ஒரு 'டிரைவிங் சிமுலேட்டர்' (Driving Simulator) ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 15 பேர் சர்க்கரை நோயால் பாதங்களில் நரம்பு பாதிப்பு அடைந்தவர்கள். மீதமுள்ளவர்களுக்கு நரம்பு பாதிப்பு எதுவும் இல்லை.

ஆய்வின் போது, கூர்மையான வளைவுகள் நிறைந்த கடினமான சாலைகளில் வாகனம் ஓட்ட பணிக்கப்பட்டனர். அப்போது, நரம்பு பாதிப்பு உள்ள ஓட்டுநர்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தவறான மாற்றத்தை செய்தனர். அதாவது, காரின் வேகத்தை குறைக்க பிரேக்கை மிதிப்பதற்குப் பதிலாக, தவறாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினார்கள். ஆனால், நரம்பு பாதிப்பு இல்லாத எந்தவொரு ஓட்டுநரும் இந்த தவறை செய்யவில்லை.

சர்க்கரை நோயால் உண்டாகும் நரம்பு பலவீனம், ஓட்டுநர்களுக்கு பெடல்களை அடையாளம் காண்பதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த ஆய்வு தெளிவான ஆதாரத்தை வழங்கியுள்ளது.

மூளைக்கு செல்லும் தவறான தகவல்கள்

நமது உடல் உறுப்புகள் எந்த கோணத்தில் அல்லது எந்த இடத்தில் இருக்கின்றன என்பதை பார்க்காமலேயே உணரும் திறனுக்கு 'ப்ரோப்ரியோசெப்ஷன்' (Proprioception) என்று பெயர். பாதங்கள் மற்றும் கணுக்காலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும்போது, பாதம் எந்த இடத்தில் இருக்கிறது என்ற தகவலை மூளைக்கு சரியான முறையில் அனுப்ப முடிவதில்லை.

இதன் காரணமாக, வேகமான வளைவுகளிலோ அல்லது அவசர சூழலிலோ கால் எந்த பெடலின் மீது இருக்கிறது என்பதில் அவர்களுக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆய்வில் பங்கேற்ற நரம்பு பாதிப்பு உள்ள ஓட்டுநர்கள் சிலர், வாகனம் ஓட்டும்போது தங்களது கால்களை கீழே குனிந்து பார்த்து உறுதிசெய்துகொண்டது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமன்றி, நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் ஆக்ஸிலரேட்டரை சீராக அழுத்துவதில்லை. அவர்கள் பெடலை மிதிக்கும்போது மிகவும் குறைவாகவோ அல்லது ஒரேடியாக மிக அதிகமாகவோ அழுத்துவதும், இடைப்பட்ட அளவில் சீராகப் பயன்படுத்த சிரமப்படுவதும் தெரியவந்துள்ளது.

தீர்வுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள், குறிப்பாக லாரி, பேருந்து போன்ற வணிக ரீதியிலான வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது பாதங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது பாத நரம்புப் பரிசோதனை (NICE வழிகாட்டுதலின்படி) செய்துகொள்வது அவசியம்.
தேவைப்பட்டால் நரம்பு பாதிப்புக்கு ஏற்ப வாகனங்களில் கையால் இயக்கும் பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் அமைப்புகளைப் பயன்படுத்தலாம்.

வாகனத்தில் பெடல்கள் இருக்கும் இடத்தில் கூடுதல் வெளிச்சம் அமைப்பது மற்றும் காரின் திடீர் வேகத்தை கட்டுப்படுத்தும் 'ஆக்ஸிலரேஷன் லிமிட்டர்' (Acceleration limiters) போன்ற தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். பாதங்களில் ஏற்படும் சிறு உணர்வின்மையைக் கூட அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் கண்டறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், பெரிய ஆபத்துகளையும் விபத்துகளையும் தடுக்க முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement