தினமும் காலையில் வேலைக்கு கிளம்பும்போது அல்லது வெளியே செல்லும்போது, என்னதான் தலைசீவி அழகாக அலங்காரம் செய்துகொண்டாலும், சில நேரங்களில் கூந்தல் சீவவே முடியாமல் வறண்டு, சணல் போலக் காட்சியளிப்பது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கவலைதான்.
இன்றைய காலகட்டத்தில் காற்றில் அதிகரிக்கும் மாசு, வெயில், மன அழுத்தம் மற்றும் கடைகளில் விற்கும் பல்வேறு ரசாயன ஷாம்பூக்கள், கண்டிஷனர்களை பயன்படுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம். வறட்சியடைந்த கூந்தலை சரி செய்யவே முடியாது என்று நினைத்து, பலர் அதிகப் பணம் செலவழித்து விதவிதமான கிரீம்களையும் சிகிச்சைகளையும் நாடுகிறார்கள்.
ஆனால், உண்மையிலேயே நமது கூந்தலுக்குத் தேவைப்படுவது வெளி பராமரிப்பு இல்லை. அதன் வேர்க்கால்களுக்கு தேவையான இயற்கை ஈரப்பதமும் சரியான ஊட்டச்சத்துமே. இதற்காக நீங்கள் அதிகப் பணம் செலவழிக்க தேவையில்லை. நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கைப்பொருட்களைக் கொண்டே வறண்ட கூந்தலை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும்.
ஆளி விதை ஜெல் (Flaxseed Gel)
ஆளி விதைகளில் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இதை நீரில் கொதிக்க வைத்து எடுக்கப்படும் ஜெல்லை தலையில் தடவி வரும்போது, வறட்சியால் கரடுமுரடான கூந்தல் மென்மையாகும். கூந்தலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, முடிகள் ஒன்றோடொன்று சிக்கிக்கொள்வது பெருமளவு குறையும்.
கற்றாழை சோறு (Aloe Vera Gel)
இயற்கை அளித்த ஒரு சிறந்த ஈரப்பதமூட்டி கற்றாழை. இதில் உள்ள சிறப்பு நொதிகள் 'ஸ்கால்ப்' ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கற்றாழை ஜெல் மிகவும் இலகுவாக இருப்பதால், கூந்தலை பிசுபிசுப்பாகவோ அல்லது பாரமாகவோ மாற்றாமல் ஆழமான ஈரப்பதத்தை தருகிறது.
இதனால் கூந்தல் சிக்கில்லாமல், பளபளப்பாக மாறும். கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் வறண்ட கூந்தலுக்கும் சருமத்திற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது எனத் தாவரவியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
தயிர்
தயிரில் புரதச்சத்தும் நல்ல கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. இவை பலவீனமான கூந்தல் இழைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி, ஸ்கால்ப் பகுதியில் உள்ள வறட்சியைப் போக்குகின்றன. தயிரை ஒரு 'ஹேர் மாஸ்க்' போலத் தலையில் தடவி ஊறவைத்து அலசி வந்தால், கூந்தலுக்கு உடனடி ஈரப்பதம் கிடைக்கும். கூந்தலின் தன்மையும் மாறி, பட்டுப்போன்ற மென்மையும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய்
தேனும் ஆலிவ் எண்ணெயும் சேர்ந்த கலவை வறண்ட கூந்தலுக்கு இயற்கை சிகிச்சையாகச் செயல்படுகிறது. தேன் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் கூந்தலுக்குத் தேவையான பளபளப்பை தருகிறது. குளித்த பிறகு கூந்தல் சிக்கில்லாமல், மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் காட்சியளிக்க இந்த எளிய கலவை பெரிதும் துணைபுரிகிறது.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்
நமது பாரம்பரியமான தேங்காய் எண்ணெயை லேசாக வெதுவெதுப்பாக்கி தலையில் தேய்ப்பது மிகச்சிறந்த பலனை தரும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் கூந்தலின் வேர்க்கால்களுக்குள் ஆழமாக சென்று ஈரப்பதத்தை அளிக்கிறது. இது கூந்தலிலிருந்து புரதச்சத்து இழப்பை கணிசமாக குறைக்கிறது என தோல் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணெயைக் கொண்டு மண்டையோட்டுப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யும்போது ரத்த ஓட்டம் சீராகி, கூந்தல் வேரிலிருந்து பலமடைவதோடு, பட்டுப்போல மென்மையாகவும் மாறும்.
இனி வறண்ட கூந்தலைப் பற்றிக் கவலைப்படாமல், உங்கள் வீட்டின் சமையலறையிலேயே கிடைக்கும் இந்த எளிய இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்திப் பாருங்கள்!

0 Comments