Ad Code

Responsive Advertisement

விஜய் கோரிக்கை - சஸ்பென்ஸ் வைத்த திருமாவளவன்





தவெக ஆட்சியமைக்க இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக, கம்யூனிஸ்ட்களின் ஆதரவை விஜய் நாடி உள்ளார்.

எங்களுக்கு ஆதரவு கேட்டு கடிதம் எழுதிய தவெகவை நாங்கள் புறந்தள்ளவில்லை. ஆனால் விசிக உயர்மட்ட குழு கூட்டிய பிறகு தான் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க முடியும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சினிமாத் துறையில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு விசிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் விஜய்யை வைத்து 100 ஆவது படத்தை தயாரிக்க அவர் ஆசைப்பட்டார்" என்று திருமாவளவன் கூறினார்.

இதனை தொடர்ந்து, தவெகவிற்கு 118 இடங்கள் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பதவியேற்க வாருங்கள் என்று தமிழக ஆளுநர் கூறியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "தவெக ஆட்சி அமைக்க ஆதரவு இருக்கிறது என்று முன்கூட்டியே கடிதம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மை உள்ள கட்சி என்கின்ற அடிப்படையிலும், தனிப்பெரும் கட்சி என்கின்ற அடிப்படையிலும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அதுதான் ஆளுநரின் பொறுப்பு மற்றும் அவரின் கடமை. விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து விசிக உயர்மட்ட குழு கூட்டம் விரைவாக கூடி முடிவெடுக்கும்" என்று திருமா கூறினார்.

இதையும் படிங்க: 'உங்களிடம் பெரும்பான்மை பலம் இல்லை': தவெக தலைவர் விஜய்யை அழைத்து ஆளுநர் விளக்கம்

பெரும்பான்மை பெற்றும் ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது குறித்தும் திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "ஆளுநரின் இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல எனவும் பாஜக தமிழ்நாட்டு அரசியலுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிப்பதுதான் ஜனநாயகம் எனவும் அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவது திட்டமிட்ட சதி என்றுதான் ஐயப்படுகிறோம். ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது என்று வேண்டுகோள் விடுகிறோம்" என்று திருமாவளவன் பதிலளித்தார்.

இக்கட்டான சூழலில் விசிக, இடதுசாரிகள் முடிவுகளை விரைவாக எடுக்காமல் தாமதமாகிறதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "காலதாமதம் இல்லை. எங்களுக்கு என்று நடைமுறைகள் உள்ளன நாங்கள் அவசரப்பட முடியாது. எங்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்; நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். விஜய்யின் கோரிக்கையை புறம்தள்ளவில்லை. எங்களது உயர்மட்ட குழுவில் விவாதித்துதான் முடிவு எடுக்க முடியும்" என்று திருமாவளவன் கூறினார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement