ஆட்சியமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் அளித்த விளக்கங்களில் ஆளுநருக்கு திருப்தியில்லை என்றும், எனவே தற்போதைக்கு ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுக்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி சென்னையில் மெரீனாவில் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அக்கட்சியிடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன.
அதிலும் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவர் ராஜிநாமா செய்தால் 107 இடங்கள்தான் இருக்கும். இதனால் தவெகவுக்கு கூடுதலாக 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் 5 இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது.
இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவுக்கு ஆதரவு கோரி தவெக கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக அந்தந்த கட்சித் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கடிதம் கொடுத்தார். ஆனால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு விசிக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். தவெக தனிப் பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிப்பதாகவும் ஆளுநரிடம் அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் ஆட்சியமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் அளித்த விளக்கங்களில் ஆளுநருக்கு திருப்தியில்லை என்றும், எனவே தற்போதைக்கு பதவியேற்க அழைப்பு விடுக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான செய்திகள் தொடர்ந்து வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் இதுதொடர்பான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மெரினாவில் குவிந்து போராட்டம் நடத்தலாம் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரைக்கு யாரேனும் குழுவாக வந்தால் விசாரணை நடத்தப்படும் என்றும், தடையை மீறி போராட்டம் செய்தால் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, தவெக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என மத்திய உளவுப் பிரிவு தமிழ்நாடு காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

0 Comments