பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? ஆட்சியமைத்தால் கவிழாது என உறுதியளிக்க முடியுமா? என்று விஜய்யிடம் ஆளுநர் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிய தவெக தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மை பலம் வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ் (5 தொகுதிகள்) ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் 6 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தவெக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், விசிகவிற்கும் ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக அந்தந்த கட்சி தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனிடையே, தவெக தலைவர் விஜய், நேற்றைய தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு நேரில் கடிதம் கொடுத்தார். ஆனாலும் ஆளுநர் எந்த அழைப்பும் விடவில்லை.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு விசிக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் மநீம உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று காலை மீண்டும் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். தனிப் பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்கிறோம் எனவும் ஆளுநரிடம் விஜய் கூறியதாக தெரிகிறது.
ஆனால், ஆட்சியமைப்பது குறித்து விஜய் அளித்த விளக்கங்களில் ஆளுநருக்கு திருப்தியில்லை என தகவல் வெளியாகியது. மேலும், 112 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கும் நிலையில், கூடுதலாக ஆதரவு தரப் போகும் 6 எம்எல்ஏக்கள் யார்? எனவும் ஆளுநர் கேள்வியெழுப்பியதாக தெரிகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? ஆட்சியமைத்தால் கவிழாது என உறுதியளிக்க முடியுமா? என ஆளுநர் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், "தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று வந்த விஜய்யிடம், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் உங்களிடம் இல்லை என ஆளுநர் விளக்கம் அளித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments