Ad Code

Responsive Advertisement

பனைமரம் - அதிசயங்கள் - நீங்கள் அறியாத உண்மைகள்

 



பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை மரத்தின் அறிவியல் பெயர் (Borassus flabellifer) என்று அழைக்கப்படுகிறது. ‘கேட்டதைத் தரும் கற்பகத்தரு’ என்று தமிழர்களால் அழைக்கப்படும் பனைமரமானது தமிழர்களின் கலாசாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 


பனை ஓலையில் செய்யக்கூடிய விசிறி முதல் அம்மனுக்கு படையல் போட பொங்கல் செய்வதற்கு தேவைப்படும் கருப்பட்டி வரை என்று இதுபோன்ற பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. பனைமரம் மனிதனுக்கு பல அற்புதங்களையும், நன்மைகளையும் தருகிறது. அதுமட்டுமில்லாமல், நம் முன்னோர்களால் தெய்வமாகவும் இந்த பனைமரம் இன்றும் வழிபடப்பட்டு வருகிறது. 


பனைமரம் என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதன் நுங்குதான். அதாவது பனங்காயின் உள்ளே இருக்கும் ஒரு ஜெல்லி போன்ற உணவுதான் நுங்கு. இதை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகும். 


ஒருவேளை பனங்காய் முற்றிவிட்டால் அது பழுத்ததும் கிடைக்கும் பனம்பழமும் சாப்பிடக்கூடிய உணவுதான். அதை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். 


பனங்கொட்டைகளை முளைக்க வைத்து அந்தக் கிழங்கையும் சாப்பிடலாம். பனங்கிழங்கில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடலுக்கு எல்லா விதங்களிலும் நன்மை தரும். பனங்கிழங்கை நன்கு உலர்த்தி அதை மாவாக்கி உப்பு போட்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். 


பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரும் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியதாகும். இதைக் காய்ச்சி தயாரிக்கப்படும் பனங்கற்கண்டை அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவில் கலந்து கொடுத்தால், அம்மையின் தாக்கம் குறையும். 


சளித் தொந்தரவு உள்ளவர்கள் பாலில் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், சளி பிரச்சனை நீங்கும். மேலும் வயிற்றுப்புண் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளையும் இது சரி செய்யும். 


பொதுவாகவே கோடைகாலங்களில் சிறவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வியர்க்குரு பிரச்சனை வரும். இதை சரி செய்வதற்கு பனைநுங்கை வியர்க்குருவின் மேல் தேய்த்தால் அது விரைவில் சரியாகும். அதேபோல அல்சர் பாதிப்பு இருப்பவர்களும் நுங்கு சாப்பிடுவதால், விரைவில் அதை சரி செய்யலாம். 


இது தவிர பனை ஓலையைப் பயன்படுத்தி பல்வேறு விதமான, கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் பனை மரத்தையும், வீடு கட்டுவதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 


இப்படி பனை மரத்தின் எல்லா பாகங்களும் நமக்கு பலன் தரக்கூடியதாகும். எனவே ஒவ்வொருவரும் உங்களது வீட்டில் ஒரு பனைமரமாவது வளர்க்க முயற்சி செய்யவும்.


அப்படிப்பட்ட இந்தப் பனைமரத்தின் 10 அதிசய விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.


1. பனை மரங்கள் வறண்ட நிலங்களில் வறட்சியைத் தாங்கி நீரின் தன்மையை தக்க வைத்து செழிப்பாக வளரக்கூடியவை.


2. பனைமரத்தில் பொதுவாக ஆண், பெண் என்று இரண்டு வகை மரங்கள் காணப்படுகின்றன.


3. ஆண் பனைமரம் அரக்கு நிறம் கொண்ட நீளமான பூக்களைக் கொண்டிருக்கும். பெண் பனைமரம் அதற்கு மாற்றாக (பனங்காய், பனம்பழம்) நுங்குகளை கொண்டிருக்கும்.


4. பனைமரத்தின் வேர்களானது சல்லி வேர்த் தொகுப்பைக் கொண்டவை. எனவே, வேர்களானது மண்ணுக்குள் நீண்ட தொலைவு நன்கு ஊடுருவி, நீரினையும் உணவையும் உரிஞ்சவும், சேகரிக்கவும் பயன்படுகிறது.


5. பனம்பாளை பூப்பதற்கு முன் அதிலிருந்து பெறப்படும் நீரைக் கொண்டு பதநீர், கள், கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.


6. பனைமரத்தின் வாழ்நாள் 100 முதல் 150 ஆண்டுகள் வரை நீடிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் தோய்வில்லாமல் பனம்பூக்களையும், பனங்காய்களையும் தொடர்ச்சியாகக் காய்கின்றன.


7. பனைமரம் புல்லினத்தைச் சேர்ந்தவை. இதன் அறிவியல் பெயர் பொராசஸ் பிளாபெல்லிபர் ஆகும்.


8. இயற்கையாக தானாகவே வளரக்கூடியவை பனைமரங்கள். பெரும்பாலும், பனையானது பயிரிடப்படுவதில்லை.


9. பனைமரம் நுங்கு, பனங்குருத்து, பனம்பால், பனையோலை, பனைக்கருக்கு, பனங்கிழங்கு, பனம்பழம் என்று பயன் தருகிறது.


10. பனைமரமானது; ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை என்று 34 வகைகளைக் கொண்டுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement