மழைக்காலம் வந்தாச்சு. படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனம் இருக்காது. அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவு தான். குளிர்ந்த காலநிலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் தான் பலருக்கும் சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
சிலருக்கு கோடை காலமாக இருந்தாலும் வெந்நீரில் குளிப்பதை தான் விரும்புவார்கள். நீங்களும் அப்படித்தானா? அப்படியானால், வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மன அழுத்தம் நீங்கும்:
வெந்நீரில் குளிப்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது கைகள் முதல் கால்கள் வரை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது அன்றைய வேலைப்பளுவால் சோர்வடைந்த உடலையும் மனதையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, துளசி அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்கள் வெந்நீரில் கலந்து குளிப்பது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுவதாக கூறப்படுகிறது.
தூக்கமின்மை:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் தூக்கமின்மை பிரச்சனையாக உள்ளது. 2019ம் ஆண்டு National Library of medicine இதழில் வெளியான ஆய்வின் படி, படுக்கைக்குச் செல்வதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வெந்நீரில் குளிப்பது வேகமாக தூங்குவதற்கு உதவும் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வெந்நீரில் குளிப்பது, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மனநிலையை மேம்படுத்துவதாக கிளீவ்லேண்ட் கிளினிக்கின் தளத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
சருமப் பராமரிப்பு:
வெந்நீரில் குளிப்பது சருமத்தின் அழகைப் பராமரிக்க உதவும் என்கின்றனர் நிபுணர்கள். வெந்நீர் சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், சூடு அளவிற்கு அதிகமாக இருக்கும் தண்ணீரில் குளிப்பது சரும பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும் என்கின்றனர்.
சளி, இருமல் நீங்கும்:
பருவநிலை மாறும்போது, இருமல் மற்றும் சளி ஏற்படுவது இயல்பு தான். இருப்பினும், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது இவற்றை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. வெந்நீரில் குளிப்பது மூக்கடைப்பு மற்றும் தலைவலியை போக்க உதவுகிறது. மேலும், இது உடல் வெப்பத்தைக் குறைத்து காய்ச்சலைப் போக்க உதவும். மாயோ கிளினிக்கின் ஒரு ஆய்வில், வெந்நீரில் குளிப்பது மூட்டுவலி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற நிலைகளைப் போக்க உதவும் என்று தெரியவந்துள்ளது.
சோர்வைப் போக்கும்:
குளிர்ந்த நீரில் குளிப்பதை விட வெந்நீரில் குளிப்பதால் அதிக உடல்நல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வெந்நீரில் குளிப்பதால் தினசரி மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்கும்.
பக்க விளைவுகள்:
வெந்நீர் குளியல் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெந்நீர் முடியின் நுண்குழாய்களில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்கி, முடியை வறட்சியடைய செய்து உடையக்கூடியதாக மாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல், வெந்நீர் உச்சந்தலையை உலர்த்துகிறது, இதனால் அரிப்பு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது முடியின் வேர்களை பலவீனப்படுத்துகிறது, இதன் விளைவாக முடி உடைந்து, முடி உதிர்தல் அதிகரிக்கும். எனவே, தலைக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது.
0 Comments