ஊட்டச்சத்து குறைபாடு, மாசுபாடு மற்றும் தூசி காரணமாக, இப்போதெல்லாம் பெரும்பாலானோர் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் அவதிப்படுகின்றனர்.
இவற்றைப் புறக்கணிப்பது சருமம் மோசமடையும் அபாயத்தை அதிகரிக்கும். இவற்றைக் குறைக்க, பலர் சந்தையில் கிடைக்கும் சில ரசாயனங்கள் கொண்ட க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவை பிரச்சனையைக் குறைக்காது, ஆனால் அதிகரிக்கக்கூடும். அதனால்தான் பருக்களை குறைக்க வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்த அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
முகப்பரு வருவதற்கான காரணங்கள்:
ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் முகப்பருவை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும். குறிப்பாக, பருவமடைந்தவுடன் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முகப்பருவை அதிகரிக்கலாம்.
கற்றாழை:
பழங்காலங்களாக சருமம் மற்றும் முடி பராமரிப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, முகப்பரு இருக்கும் இடங்களில் கற்றாழை ஜெல்லை தடவுவது முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை தடுக்கிறது.
இதற்கு, கற்றாழை ஜெல்லை முகப்பருவில் தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்கு பின் கழுவவும். அன்றாடம் சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவுவது முகப்பரு ஏற்படுவதை தடுப்பதாக ALOE VERA: A SHORT REVIEW என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிரீன் டீ:
கிரீன் டீயில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளதால் இது முகப்பருவிற்கு நல்ல தீர்வாகும். கூடுதலாக இது வீக்கத்தைக் குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் டோனரைப் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். கிரீன் டீயை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும் என தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு ஆய்வில் , பாதகமான நிகழ்வுகளை ஏற்படுத்தாமல் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க கிரீன் டீ நன்மை பயக்கும் என்று கூறுகிறது.
இலவங்கப்பட்டை:
உணவுகளின் சுவையை அதிகரிக்கும் இலவங்கப்பட்டை, சரும பிரச்சனைகளையும் சமாளிக்க உதவும் என்கின்றனர் அழகு நிபுணர்கள். இதற்கு, இலவங்கப்பட்டை பொடியில் சிறிது தேன் கலந்து முகப்பருவில் தடவவும். சில நாட்கள் தொடர்ந்து இதை செய்து வர முகப்பரு பிரச்சனை நீங்குவதாக கூறப்படுகிறது.
தேன்:
தேனில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் சரும பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது. பருக்கள் மீது சிறிது தேனை தடவி 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர நல்ல மாற்றம் ஏற்படும்.
ஆப்பிள் சைடர் வினிகர்:
ஆப்பிள் சைடர் வினிகர் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவி சரும பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. இதற்கு, காட்டனை ஆப்பிள் சைடர் வினிகரில் லேசாக நனைத்து பருக்கள் மீது தடவி, சிறிது நேரம் விட்டுவிட்டு பின்னர் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலனைத் தரும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவும். இருப்பினும், இது உணர்திறன் வாய்ந்த சருமத்தை எரிச்சலடையச் செய்யும், எனவே எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து முகப்பருவில் மட்டும் தடவ பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வெயிலில் செல்வதற்கு முன் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தக்கூடாது.
பப்பாளி:
பச்சை பப்பாளியில் பப்பேன் என்ற நொதி உள்ளது. இது இறந்த செல்களை அகற்றவும், துளைகளை மூடவும் உதவுகிறது. பப்பாளி துண்டுகளை அரைத்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
0 Comments