சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் கே. எம். செரியன் சனிக்கிழமை(ஜன. 25) காலமானார். அவருக்கு வயது 82.
பெங்களூரில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னாரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார்.
சென்னை பெரம்பூரிலுள்ள ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய சாதனையாளரும் இவரே. நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரும்கூட. மருத்துவத் துறையில் அன்னாரது சேவையைப் பாராட்டி டாக்டர் கே. எம். செரியனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருதளித்து கௌரவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ‘ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையை’ நிறுவி மருத்துவ சேவை வழங்கி வந்த டாக்டர் கே. எம். செரியன் மருத்துவத்துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்தவர். டாக்டர் கே. எம். செரியனின் சுயசரிதை நூலான ’ஜஸ்ட் ஆன் இன்ஸ்ட்ரூமெண்ட் (வெறும் ஒரு உபகரணம்)’ கடந்த சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் வெளியிடப்பட்டிருந்தம் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அன்னாரது மறைவு மருத்துவத்துறையில் ஈடு செய்ய இயலாததொரு பேரிழப்பாக அமைந்துவிட்டது; பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
0 Comments