பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி மற்றும் அதே எண்ணிக்கையில் இலவச சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன்களை ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர். இதனைத்தொடர்ந்து பொங்கல் பரிசுக்தொகுப்பு கடந்த 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அன்று ஒருநாள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
நேற்று வரை, எட்டு நாட்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நடைபெற்றது. இதுவரை சுமார் 75 சதவீதம் ரேஷன் அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை வாங்காதவர்களுக்கும் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மாலை வரை பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments