தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரன் விலை, கடந்த இரு தினங்களில் மட்டும், 880 ரூபாய் அதிகரித்து, 60,000 ரூபாயை நெருங்கி உள்ளது.
சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், 2024 அக்., 31ல், 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 59,640 ரூபாய்க்கு விற்றது.
இதுவே இதுவரை, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம், 7,390 ரூபாய்க்கும்; சவரன், 59,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 103 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 7,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 59,600 ரூபாய்க்கு விற்பனையானது.
60 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; 3 நாட்களில் மட்டும் ரூ.960 அதிகரிப்பு
வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 104 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை, சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 60,000 ரூபாயை நெருங்கி உள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க அதிபராக, வரும் 20ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர், தன் ஆட்சியில் செயல்படுத்த உள்ள அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அவை, பல வகைகளில் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் இருந்தன. இதனால், பெரும்பாலான முதலீட்டாளர்கள், மற்ற முதலீடுகளை தவிர்த்து, தங்கத்தில் அதிகம் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்னும் மூன்று நாட்களுக்கு, தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருக்கும். டிரம்ப் பதவி ஏற்ற பின், தெளிவான நிலைக்கு தங்கம் விலை திரும்பும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக வரும் காலங்களில் தங்கம் விலை உயரும்.
0 Comments