வீட்டில் விளக்கேற்றும் முறை
கார் இருள் சூழ்ந்த கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி வெளிச்சத்தில் புதிதாக மண் அகல் விளக்கு வாங்கி வீடு முழுவதும் ஏற்றுவதால் பஞ்சபூதங்களையும் ஒன்றிணைத்து இயற்கையை வழிபடுவதாக சொல்லப்படுகிறது. இது குறிப்பாக மண்ணிற்கு நன்றி தெரிவிப்பதையும் ,இறைவன் ஜோதி வடிவானவர் என்பதையும் உணர்த்துகிறது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிய பின்பு தான் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் .வீட்டில் அனைத்து இடங்களிலுமே தீபம் ஏற்ற வேண்டும். குறைந்தது விளக்குகள் 30 நிமிடங்கள் எரிய விட வேண்டும். முதலில் வீட்டு வாசலில் விளக்கேற்றி பிறகு வீட்டிற்குள் ஏற்ற வேண்டும்.
பூஜை அறையில் விளக்கேற்றி வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது. குறைந்தது 27 விளக்குகளாவது ஏற்ற வேண்டும் .இது 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. விளக்குகள் உடைந்திருந்தாலோ அல்லது கருமை படிந்திருந்தாலோ அவற்றை பயன்படுத்தக் கூடாது. முடிந்தவரை புதிய மண் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
மண் அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி கொண்டு விளக்கேற்ற வேண்டும். இதுவே சரியான முறையாகவும் சொல்லப்படுகிறது .மேலும் பசு நெய்யில் மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் இது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்க செய்யும் என்றும் நம்பப்படுகிறது.
வீட்டு வாசலில் இரண்டு விளக்குகளும், சுவாமி சன்னதியில் காமாட்சி விளக்கு மற்றும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வழிபடலாம். அதுமட்டுமல்லாமல் குத்து விளக்கு ஏற்றியும் வழிபடலாம் .குத்துவிளக்கானது வெள்ளி அல்லது வெண்கலம், பித்தளையில் இருப்பதே சிறப்பாகும் .
0 Comments