பள்ளியில் படிக்கும் 4 வயது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்த துப்புரவு தொழிலாளியை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாபூர் பகுதியில் ஆங்கிலப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு ஆக.,16ம் தேதியன்று கழிப்பறையில் நான்கு வயதான இரண்டு பெண் குழந்தைகளுக்கு, அங்கு பணியாற்றும் 23 வயதான துப்புரவு தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்புரவு தொழிலாளியை கைது செய்தனர். இது குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
ஆத்திரமடைந்த மக்கள் இன்று ( ஆக.,20) பள்ளி முன் குவிந்தனர். பிறகு, அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்று, தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், கோஷம் எழுப்பினர். இதனால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. உள்ளூர் ரயில்கள் ரத்தாகின. போலீசார், ரயில்வே அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக செய்தனர்.
அதேநேரத்தில் பலர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க பள்ளி நிர்வாகம் தவறி விட்டதாக குற்றம்சாட்டினர். பள்ளி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், உள்ளேயிருந்த பொருட்களை சூறையாடினர்.
கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதனையெடுத்த போராட்டக்காரர்கள் திருப்பி வீசினர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
இதனையடுத்து பள்ளி முதல்வர் மற்றும் இரண்டு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், பல்வேறு குறைபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டது. பெண் குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை தூய்மை செய்ய பெண் துப்புரவு பணியாளர்கள் பணியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
0 Comments