இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை டி20 போட்டியில் ஒரே ஓவரில் 36 ரன்கள் விளாசினார். அந்த சாதனை இதுவரை தகர்க்க முடியாததாக இருந்த நிலையில், சமோவா அணி வீரர் டேரியஸ் விசர் என்பவர் 39 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்தார்.
2007ம் ஆண்டு நடந்த முதலாவது சர்வதேச டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் இந்திய வீரர் யுவராஜ் சிங், ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார்.
உலக கோப்பை டி20 வரலாற்றில் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுக்கப்பட்டது அதுவே முதன்முறை. அதன்பிறகு 2021ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு, 2024ல் நிக்கோலஸ் பூரன், நேபாள வீரர் திபேந்திர சிங் ஆகியோரும் ஒரு ஓவரில் 36 ரன்கள் குவித்துள்ளனர். யுவராஜ் சிங்கின் சாதனை சமன் மட்டுமே செய்திருந்த நிலையில், 17 ஆண்டுகளாக அதனை யாரும் தகர்க்க முடியவில்லை.
இந்த நிலையில், ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பை ஈஸ்ட் ஏசியா - பசிபிக் தகுதிச் சுற்றில் பசhபிக் தீவுகளில் உள்ள நாடுகளான வனாட்டு மற்றும் சமோவா அணிகள் மோதின.
சமோவா அணி முதலில் பேட்டிங் செய்தது. சமோவா வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். மறுபுறம் அந்த அணியின் டேரியஸ் விசர் அதிரடியாக ரன்களை சேர்த்து வந்தார். சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. அதில் டேரியஸ் விசர் மட்டும் 5 பவுண்டரி, 14 சிக்சர் உட்பட 62 பந்தில் 132 ரன்கள் குவித்தார். 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இந்தப் போட்டியில் வனாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15வது ஓவரில் டேரியஸ் விசர், ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்த சாதனை படைக்கப்பட்டது. இதன்மூலம் 17 ஆண்டுகளாக அசைக்க முடியாத யுவராஜ் சிங்கின் சாதனை தகர்க்கப்பட்டது. அதேபோல், டி20 போட்டியில் அதிக சிக்சர் (14) அடித்த சாதனையையும் டேரியஸ் படைத்தார்.
0 Comments