Ad Code

Responsive Advertisement

மக்களே உஷார் - WhatsApp மூலம் ரூ.53.07 கோடி சைபர் கிரைம் மோசடி

 



வளர்ந்து வரும் நவீன யுகத்துக்கு ஏற்ப புது, புது விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் கார்டின் 13 இலக்க எண்ணை பெற்று மோசடி செய்தது முதல் தற்போது போலீஸ், சிபிஐ அதிகாரிகள்போல பேசி ஆன்லைன் மோசடி நித்தம், நித்தம் வளர்ச்சி பெற்று வருகின்றன. 


சில ஆண்டுகளுக்கு முன்பு போன் செய்து பேசும் வடமாநில ஆசாமிகள் ஏடிஎம் கார்டின் 13 இலக்க எண்ணை கேட்டு மோசடியை தொடங்கினர். அதற்கு முன்பும் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறினாலும், வடமாநில ஆசாமிகள் சிக்கி, திணறி தமிழில் பேசி மோசடி செய்ய முயற்சித்து வசை வாங்கியது தனிக் கதை.


அதன் தொடர்ச்சியாக இந்த மோசடிகள் பல்வேறு பரிமாணங்களை பெற்றுள்ளன. அதில், ஆன்லைன் விற்பனை செயலி மூலம் கார், பைக் குறைந்த விற்பனைக்கு இருப்பதாக பதிவு செய்து, அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களிடம், ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், இடமாறுதல் காரணமாக வேறு ஊருக்கு செல்ல இருப்பதால் எனது வாகனத்தை குறைந்த விலைக்கு விற்பதாகவும், கூறி முன் பணம் வாங்கி கம்பி நீட்டுவது, ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் என சுருட்டுவது, ஆன்லைன் பகுதி நேர வேலை என நம்ப வைத்து மோசடியில் சிக்க வைப்பது என பல விதமாக தொடர்கிறது.


கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் பதிவாகியுள்ளன. இதில், பொதுமக்கள் ரூ.53.07 கோடி பணம் இழந்துள்ளனர். ரூ.4.31 கோடி பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர். 


இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


கோவை நகருக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினசரி சராசரியாக 10 முதல் 15 வரையிலான ஆன்லைன் மோசடி புகார்கள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான புகார்கள் ஆன்லைன் பகுதி நேர வேலை, ஆன்லைன் வர்த்தகத்தில் குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் என புகார் வருகிறது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுவை முதல் சாய்சாக தேர்ந்தெடுக்கின்றனர். எனவே அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ஏதேனும் குறுந்தகவல் வந்தால் அதற்கு ரிப்ளை செய்ய கூடாது.


பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் படித்த பட்டதாரிகள், இன்ஜினியர்கள், ஐடி ஊழியர்களாகவே உள்ளனர். எனவே சைபர் கிரைம் மோசடி தொடர்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 


சமூக வலைதளங்களில் பணம் தொடர்பாக வரும் வேண்டுகோளை மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். கவனமுடன் செயல்பட்டால், நாம் வாழ்நாளில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இழக்காமல் நிம்மதியாக வாழலாம். சமீபத்தில் ஒருவரிடமே ரூ. 50 லட்சம் வரை ஆன்லைன் மோசடி நடைபெற்றது.


உங்களுக்கு யாரோ பார்சலில் போதைப்பொருள் அனுப்பி உள்ளனர் என சிபிஐ அதிகாரிபோல பேசுவார்கள், பின்னணி செட்டப்பில் வாக்கி டாக்கி ஒலி கேட்கும். 


இதனால் எதிர் முனையில் பேசுவர்களுக்கு பயத்தை காட்டி, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க பணம் அனுப்ப வேண்டும் என மோசடியை ஆரம்பித்துள்ளனர். இது போன்ற பல்வேறு மோசடிகளை அடுக்கி கொண்டே போகலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


கடந்த 5 மாதத்தில் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் குண்டாஸ் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். காவல் துறை குற்றங்களை தடுக்க எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முக்கிய பங்கு வகிப்பது பொதுமக்களே. எனவே எச்சரிக்கையுடன் செயல்பட்டு பணத்தை இழக்காமல் பாதுகாப்பது பொதுமக்களின் கையில்தான் உள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement