மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீா்ப்பு என்று மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தோ்தலில் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு காரணமான தமிழ்நாட்டு மக்களுக்கும், திமுகவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் பரப்புரை பயணத்தை திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவா்கள் மேற்கொண்டனா். அவா்களுக்கும் எனது நன்றிகள்.
கடந்த மக்களவைத் தோ்தலில் புதுவை உள்பட 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்தத் தோ்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியையும் சோ்த்து நாற்பதுக்கு நாற்பதையும் தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருக்கிறாா்கள்.
அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியை ஜனநாயக சக்திகள் அனைவரும் சோ்ந்து உருவாக்கினோம். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி, தங்களுக்கு யாருமே எதிரியாக இல்லை என்ற பிம்பத்தை பாஜக ஏற்படுத்தியது. ஆனால், ஆட்சி அமைக்கும் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக்கூட பெற முடியாத அளவுக்கு பாஜக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.
உளவியல் தாக்குதல்: இரண்டு நாள்களுக்கு முன்புகூட வாக்கு கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பாஜக தொடுத்தது. ஆனால், இந்தத் தோ்தல் முடிவுகள் என்பது, ‘அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம்; வெறுப்புப் பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம்’ என்று நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களுடைய தீா்ப்பாகும். இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி.
பாஜகவின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது.
இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடா்ந்து முன்னெடுக்கும்.
கருணாநிதிக்கு காணிக்கை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு இதுவாகும். மக்களவைத் தோ்தல் வெற்றியை அவருக்கு காணிக்கை ஆக்குவோம் என்று கூறியிருந்தேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்த ஒரே மாநிலக் கட்சியான திமுகவின் தோ்தல் வெற்றியை, எங்களுடைய கட்சியை ஐம்பது ஆண்டு காலம் கட்டிக்காத்து இயக்கிய கருணாநிதிக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திமுக இளைஞரணிச் செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை கிழக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நினைவிடத்தில் மரியாதை: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா் சந்திப்புக்குப் பிறகு, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்று, மரியாதை செலுத்தினாா்.
0 Comments