கடலூரில் ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்டு, உடலை சாக்கு மூட்டையில் கட்டி நெய்வேலியில் வீசப்பட்டார். போலீஸார் எலும்புக்கூடை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த விக்டர் (40) என்பவர் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்ததால் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.
தற்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வசித்து வந்த நிலையில் மே 18-ம் தேதி வெளியில் சென்ற விக்டர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து விக்டரின் தாய் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மே 27-ம் தேதி அவரது தாயார் பாத்திமா மேரி திருப்பாதிரிப்புலியூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், விக்டரின் செல்போன் கடைசியாக குறிஞ்சிப்பாடி பகுதியில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார், குறிஞ்சிப்பாடி பகுதிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், “ஆசிரியர் விக்டர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுடன் பழக்கத்தில் இருந்தார். இதுதொடர்பாக அந்தப் பெண் என்னிடம் தெரிவித்ததால், விக்டரை பலமுறை கண்டித்தேன். ஆனால் அவர் அந்த பெண்ணுடன் இருந்த பழக்கத்தை விடவில்லை. மே 18-ம் தேதி இரவு குறிஞ்சிப்பாடி வந்த விக்டரை தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டிஅதை பைக்கில் எடுத்துச் சென்று நெய்வேலி டவுன்ஷிப் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு பின்புறத்தில் வீசிவிட்டு வந்தேன்” என குறிப்பிட்டார்.
இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் எலும்புக் கூடு இருந்தது. போலீஸார் எலும்புக்கூடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது கொலை செய்யப்பட்ட விக்டரின் எலும்புக்கூடா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும். மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் அந்த பெண்ணை போலீஸார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments