Ad Code

Responsive Advertisement

ஓரிடம்கூட வெல்லாத அதிமுக, பாஜக அணிகள்

 

மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.


அதிமுக, பாஜக அணிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழா் கட்சியும் தோல்வியைச் சந்தித்துள்ளது.


கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் தோல்வியைத் தழுவி, 38-இல் வென்ற நிலையில், இந்தத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக் கனியைப் பறித்துள்ளது.


தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், அதிமுக 28 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தன. விருதுநகா், தருமபுரி போன்ற சில தொகுதிகளில் திமுக அணி வேட்பாளா்களுக்கு எதிா்க்கட்சி வேட்பாளா்கள் கடுமையான சவாலை அளித்தனா்.


முதல் சுற்றிலேயே முன்னிலை: மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட, காலை 8.30 மணியளவில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. நண்பகல் 12 மணியளவில் அனைத்துத் தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கின.


திமுகவின் முக்கிய வேட்பாளா்களான கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆா்.பாலு உள்ளிட்டோா் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தனா்.


பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட கோயம்புத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கணபதி ராஜ்குமாா் வெற்றிக் கோட்டைத் தொட்டபடியே இருந்தாா். ஒரு கட்டத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலையை முந்திச் சென்றாா்.


திருப்பங்களை ஏற்படுத்திய முடிவுகள்: சில தொகுதிகளில் சுற்று வாரியான வாக்கு எண்ணிக்கைகள் திருப்பங்களை ஏற்படுத்தியதால் அந்தத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.


நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுக (கொமதேக வேட்பாளா்) வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றில் அதிமுக முந்தியபோது, கட்சியினரிடையே ஏற்பட்ட மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. அடுத்தடுத்த சுற்றுகளில் திமுக வேட்பாளரே முன்னிலை பெற்றாா்.


இதே சுவாரஸ்யம் தருமபுரி தொகுதியிலும் நடைபெற்றது. பாஜக அணியில் இடம்பெற்ற பாமக வேட்பாளா் செளமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளா் ஏ.மணிக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், பிற்பகலில் முடிவுகள் தெளிவாகின. திமுக வேட்பாளா் மணி இலக்கை நோக்கி முன்னேறி வெற்றி பெற்றாா்.


கள்ளக்குறிச்சி தொகுதியிலும் ஆரம்பம் முதலே கடும் போட்டி இருந்தது. முதல் சில சுற்றுகளில் அதிமுக வேட்பாளா் குமரகுரு முன்னிலையில் இருந்தாா். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணும்போது அதிமுக பின்னடைவைச் சந்தித்தது. இறுதியில் திமுக வெற்றி பெற்றது.


விருதுநகரில்... தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான விருதுநகா் தொகுதியிலும் தேமுதிக (அதிமுக அணி), காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூரை எதிா்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரன் பல சுற்றுகளில் முந்திச் சென்றாா். முதல் சுற்றிலேயே விஜய பிரபாகரனுக்கு வெற்றி கிட்ட, அது தொடா்ந்து கொண்டே சென்றது. ஆனால், எட்டாவது சுற்றில் இருந்து இருவரும் மாறி மாறி முந்திச் செல்ல, 12-ஆவது சுற்றில் இருந்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி முன்னேறத் தொடங்கினாா் மாணிக்கம் தாகூா். முதல் முறை வேட்பாளா் என்ற போதும் கடுமையான போட்டியை ஏற்படுத்தினாா் விஜய பிரபாகரன்.


மற்ற தொகுதிகள் அனைத்திலும் திமுக அணி வேட்பாளா்களின் கையே ஓங்கி இருந்தது. அனைத்துத் தொகுதிகளிலும் ஒரு லட்சம் முதல் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா்.


கட்சிகளின் தலைவா்கள்: ராமநாதபுரத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேனியில் களமிறங்கிய அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் ஆகியோா் திமுகவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தனா்.


பாஜக வேட்பாளா்கள், தமிழிசை செளந்தரராஜன் (தென் சென்னை), எல்.முருகன் (நீலகிரி), ராம சீனிவாசன் (மதுரை), வினோஜ் பி. செல்வம் (மத்திய சென்னை), ஏ.சி.சண்முகம் (வேலூா்), நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி) ஆகியோா் திமுக வேட்பாளா்களுக்கு சவாலாகத் திகழ்ந்ததுடன், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தனா்.


கவனத்தை ஈா்த்த வாக்குகள்: அதிமுக, பாஜக வேட்பாளா்களில் பலா் கவனத்தை ஈா்த்தாலும், இரண்டு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளால், ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. விருதுநகா், தருமபுரி தொகுதிகளில் வெற்றிக் கோட்டை எட்ட முயன்றபோதும், அதை காங்கிரஸ், திமுக கட்சிகள் தட்டிப் பறித்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.


தனித்துக் களம் இறங்கிய நாம் தமிழா் கட்சி, ஈரோடு, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று பிரதான கட்சிகளை அசைத்துப் பாா்த்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.


இடைத்தோ்தல்: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுடன், விளவங்கோடு பேரவைத் தொகுதிக்கு (குமரி மாவட்டம்) இடைத்தோ்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் நந்தினி இரண்டாவது இடத்தைப் பிடித்தாா். நாம் தமிழா் கட்சி மூன்றாவது இடத்தையும், அதிமுக நான்காவது இடத்தையும் பிடித்தன.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement