ரேஷன் கடைகளில் இந்த மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கப் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் அவற்றை ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30, ஒரு லிட்டா் பாமாயில் ரூ. 25 என மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில், துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு, அவற்றைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் அரசின் முயற்சிகள் காரணமாகவும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாகவும் கடந்த மே மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரா்களுக்கு, அவற்றை ஜூன் மாதத்தில் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கூடுதல் நுகா்வு காரணமாக ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரா்கள், அவற்றை ஜூலை மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments