நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜயை இதற்கு முன்பு பாஜக உள்பட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் விவேகானந்தர் பாணியில் பேச்சை தொடங்கினார். மேலும் அவரது நெற்றியில் வைத்திருந்த திலகம் அதிக கவனம் பெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். கட்சியின் பெயரை அவர் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். அதோடு வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
தற்போது சினிமாவில் நடித்து வந்தாலும் கூட கட்சி பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தையும் அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடிகர் விஜய் முதல் முதலாக 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து நேரில் பாராட்டி பரிசு வழங்கி இருந்தார்.
தற்போது அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில் மீண்டும் இந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை சட்டசபை தொகுதி வாரியாக அழைத்து விஜய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்று வழங்கி வருகிறார். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகள் நடிகர் விஜயின் பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நெற்றியில் இந்துக்கள் வைப்பதுபோல் திலகத்தை பொட்டாக வைத்திருந்தார். நடிகர் விஜயை இதற்கு முன்பு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர் என விமர்சனம் செய்திருந்தனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, ஜோசப் விஜய் என விமர்சனம் செய்த வரலாறும் உள்ளது. இத்தகைய சூழலில் தான் நான் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன் என்பதை காட்டும் வகையில் நடிகர் விஜய் தனது நெற்றியில் இந்துக்கள் போன்று நெற்றியில் பொட்டு வைத்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது இந்து துறவியான சுவாமி விவேகானந்தர் போல் தனது பேச்சை தொடங்கினார். அதாவது பரமஹம்சரின் சீடராக இருந்த விவேகானந்தர் அதன்பிறகு துறவியானார். அதன்பிறகு மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த விவேகானந்தர், விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தார். அதன்பிறகு தான் அமெரிக்கா சென்றார். சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை உலக புகழ்பெற்றவை. அப்போது அவர் அனைவரையும் பார்த்து சகோதர, சகோதரிகளே என்று அழைத்து உரையை நிகழ்த்தினார்.
அதேபோல் தான் இன்று மாணவ-மாணவிகள் முன்பு பேச்சை தொடங்கிய விஜய், ‛‛நடந்து முடிந்த 10வது மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த எனது தம்பி, தங்கைகளுக்கும், பெருமையோடு வந்துள்ள அவர்களின் பெற்றோர்களுக்கும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க காரணமாக இருக்கும் பொதுச்செயலாளர் ஆனந்த், ராஜேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
பாசிட்டிவான எனர்ஜி உள்ளவர்களை பார்க்கும்போது தானாகவே ஒரு எனர்ஜி, கெமிஸ்ட்ரி உருவாகும் என்று சொல்வார்கள் அல்லவா. அது உங்களின் முகத்தை பார்த்ததில் இருந்து இன்று காலையில் இருந்து எனக்கு பயங்கரமாக வொர்க் அவுட் ஆகியிருக்கு என்று பேச்சை தொடங்கினார். அதாவது இந்த பேச்சின் மூலம் சுவாமி விவேகானந்தரை போல் சகோதர சகோதரிகள் என்பதை போல் நடிகர் விஜய் ‛‛எனது தம்பி தங்கைகளே '' எனக்கூறியுள்ளார். இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
0 Comments