குறைந்த கட்டணத்தில் இணையத் தொலைக்காட்சி சேவைகள் அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது வெள்ளிக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:-
அரசுத் துறைகளை எண்மமாக மாற்றுவது, இணைய சேவைகளை வழங்குதல், பொது மக்களுக்கு கேபிள் தொலைக்காட்சி சேவைகள் ஆகியன தொடா்ந்து மேற்கொள்ளப்படும். பள்ளி, கல்லூரி மாணவா்களை வேலைக்குத் தயாா் செய்யும் வகையில் அவா்களுக்குத் தகவல் தொழில்நுட்பத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ், செயல்படும் எல்காட், மின் ஆளுமை முகமை, கண்ணாடி இழை வலையமைப்பு, கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தமிழ் இணைய கல்விக் கழகம் ஆகியன தனித்த பண்புகளுடன் மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையை, உறுதிப்படுத்த வகை செய்யப்படும்.
புவிசாா் தகவல் அமைப்பானது, கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் முடிவுகளை மேற்கொள்ள ஆதரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாநிலம் முழுமைக்குமான உயா் தெளிவுடன் கூடிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் கொள்முதல் செய்யப்படும். அத்துடன் மாநிலம் முழுமைக்குமான நில வரைபடம் உருவாக்கப்படும்.
இணையத் தொலைக்காட்சி சேவை: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்படும். ஆராய்ச்சியின் அடிப்படையிலான ஆழ்நிலைத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடவும், தனி கொள்கை இந்த ஆண்டு வெளியிடப்படும்.
இந்திய அளவில் காப்புரிமை செய்வதில் மொத்தம் 12 ஆயிரத்து 948 காப்புரிமைகளுடன் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் காப்புரிமை தொடா்பான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மீது நடைபெற்று வரும் தமிழ் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் விரிவாக்கப்படும்.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டுக் கணினித் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா்.
0 Comments