திருச்சி மாவட்டம், மணப்பாறையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்குள்ள சார்பு நீதிமன்றத்துக்கு, நேற்று காலை, 11.30 மணிக்கு கூன் விழுந்த பாட்டி ஒருவர், கையில் கம்பு ஊன்றியபடியும், முதுகில் சாக்கு மூட்டையைச் சுமந்தபடியும் வந்தார்.
நீதிமன்றம் உள்ளே செல்ல முயன்றபோது, அங்கிருந்த உதவியாளர் தடுத்தார். அவரை, கன்னத்தில் செல்லமாகக் குத்தி, தள்ளிவிட்டு நுழைந்தார். அங்கிருந்த நீதிபதியைப் பார்த்து, 'என் வழக்கை இங்கிருந்த பெண் நீதிபதி கெடுத்து குட்டி சுவராக்கி விட்டார்' என்றார்.
அங்கிருந்த நீதிபதி, வக்கீல்கள், பாட்டியின் ஆவேசம் கண்டு, எதையும் சொல்லாமல் சென்று விட்டனர்.
பாட்டி தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கையில் வைத்திருந்த கம்பை தரையில் தட்டியும், உரத்த குரலில் கத்தியும் பேசினார். இதனால், நீதிமன்ற வளாகமே பரபரப்புக்குள்ளானது.
நீதிமன்ற போலீசார், பாட்டியிடம் அரை மணி நேரம் பேசி அவரை வெளியே அனுப்பினர்.
அந்த பாட்டி, புதுக்கோட்டை இலுப்பூரைச் சேர்ந்த அழகம்மாள், 82. யாசகரான இவர், சேர்த்து வைத்த பணத்தை, ஒருவருக்கு கடனாக கொடுத்தார்.
அந்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளார்.
0 Comments