நடிகர் திரு. விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி எல்லோரையும் வருத்தமடையச் செய்துவிட்டது. அவரின் ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரின் ரசிகனல்ல. அவர் திரைப்படங்களையும் விரும்பிப் பார்த்ததில்லை. ஆனால், நேர்மையான அரசியல் நமக்கு வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் இவரின் அரிசியல் நாட்களை புறந்தள்ளிவிட முடியாது.
ஒருவரை கொல்ல வேண்டுமென்றால், அதற்கு முக்கியமாக இரண்டு வேண்டும். ஒன்று, முன் விரோதம், மற்றொன்று, வெறுப்பு. ஆனால், இந்த இரண்டுமே இல்லாமல் ஒருவரை ஒழிக்க முடியுமென்றால் அது மீடியாக்களால் மட்டுமே முடியும். கத்தியின்றி, ரத்தமின்றி ஊடகங்கள் நிகழ்த்திய கொலைகள் இரண்டு. ஒன்று உலகை அதிரவைத்த இளவரசி டயானா. மற்றொன்று திரு. விஜயகாந்த். இருவர் மீதும் ஏன் பத்திரிக்கையாளர்களுக்கு இவ்வளவு வன்மம் என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
விஜயகாந்த் எதைப் பேசினாலும் அதை காமெடியாக்கி, அவரிடம் கேள்வி கேட்கும்போதே பிரச்னையை கிளப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பி வந்த ஊடகங்கள் அவரின் அரசியல் அழிவுக்கு வித்திட்டதை உலகம் அறியும்.
இன்று நாம் பார்ப்பது விஜயகாந்தின் உடலுக்கு ஏற்பட்ட மரணம். ஆனால், பல வருடங்களுக்கு முன்பாகவே அவரை ஊடகங்கள் கொன்று விட்டன. இரண்டு அசுர பலம் கொண்ட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்தவர் அவர். அப்படி ஒரு நிலையை கையிலெடுக்க இன்றுவரை யாருக்கும் தைரியம் வரவில்லை. மிகப் பெரிய சவடால் வீரர்களெல்லாம் இரண்டில் ஒன்றுக்குப் பின் நின்று நிரந்தர அடிமையாக நின்றிருப்பதை பார்க்கிறோம்.
அவர் மீது எந்த ஊழல் குற்றாச்சாட்டுகளோ, எதிர்கட்சியாக இருந்த போது சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டோ இல்லை. இன்றைய எதிர்கட்சியான அதிமுக செயல்படுவதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பாக செயல்பட்டார். அவரின் மரணம், அவரின் சிந்தனையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத தமிழகத்துக்குத்தான் பெரிய இழப்பு. அரசியலுக்கு வந்த பிறகு தனிப்பட்ட முறையில் அவர் இழந்ததுதான் அதிகம். சம்பாதித்தது ஏதுமில்லை. வேறு யாராவது இருந்தால், அவரின் மண்டபம் இடிக்கப்பட்டபோதே, அதைக் காப்பாற்றிக் கொள்ள சமரசத்தை யோசித்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து கிடந்திருப்பார்.
அவர் அரசியலில் தோற்றுப் போனதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். அதில் முதலில் இருப்பது, நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தது. அடுத்தது, ஆரியன், திராவிடன், மதம், ஜாதி ஆகிய அரசியலை கையிலெடுக்காதது.. .... இறுதியாக . . . மிரட்டியும் அடிபணியாமல் இருந்தது. இடுப்பில் துண்டைக் கட்டி, புழுவாய் வாழ்வதை அவர் விரும்பவில்லை. ஒரு ஈனப் பிறவியாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அரசியல் உயர்வுக்கு இவையெல்லாம் அவசியம். இப்படி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலையிலும், அப்படிப்பட்ட வெற்றியை அவர் விரும்பியதாகத் தெரியவில்லை.
இன்னும் இரண்டு நாட்களுக்கு அவரை ஆஹா, ஓஹோ என்று பல பெரிய மனிதர்கள் புகழ்ந்து தள்ளுவார்கள். இப்படி பேசுபவர்கள் எத்தனை பேர் அவரின் கடினமான நாட்களில் உடன் இருந்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள்!
இந்த தருணத்தில், திருமூலரின் பாடல் நினைவிற்கு வருகிறது. அது.. . . .
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
இன்று ஊரே கூடி அழுகிறது. திரு. விஜயகாந்த், உடலாகிப் போனார்.
ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்..
அப்போ யார் அழுதால் அவனுக்கென்ன
காரியம் முடிப்பான்
திரு. விஜயகாந்த் அவர்களே! போய் வாருங்கள். மீடியாக்கள் நினைத்தால் ஒருவரை வீழ்த்திவிடலாம் என்ற சிந்தனைக்கு உங்களின் மரணம் முற்றுப் புள்ளியாக அமையட்டும். கேடுகெட்ட அரசியல் களம் ஒரு நாள் மாறும். அது உங்களுடைய நாட்களில் நடக்காமல் போனதே என்ற வருத்தத்துடன் உங்களுக்கு விடை கொடுக்கிறோம். பாரதியாரும், வ.உ.சிதம்பரம் பிள்ளையும் பார்க்காத சுதந்திரம் போல, சுத்தமான அரசியல் களத்தை பார்க்காமல் சென்றுவிட்டீர்கள்.
இந்த நிலை மாறும். காத்திருக்கிறோம்..?
*கனத்த இதயத்துடன்*
0 Comments