Ad Code

Responsive Advertisement

"அப்பாக்கள்" - எனும் மிகவும் பரிதாபத்திகுறிய உயிரினங்கள்

 



அப்பா வருவதற்குள் வீட்டுக்கு வந்துவிடு


அப்பாவுக்கு தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான்


இப்படியே பண்ணிகிட்டு இருந்தீன்னா அப்பாகிட்ட சொல்லிடுவேன்


ஏய் வர்ற மாதிரி இருக்கு போய் படி


அப்பா வர்றாரு டிவிய ஆஃப் பன்னு


அப்பாகிட்டவே இப்படி பேசுறியா


இது போன்ற வார்த்தைகள் அப்பாக்களை கண்டிப்பானர்களாகவும் கோபக்காரர்களாகவும் ஒரு பிம்பத்தை கட்டமைத்தது. அப்பாக்கள் 8-10 வயதுவரை பிள்ளைகளிடம் நெருக்கமாய் பாசமுடன் தான் பெரும்பாலும் இருந்தனர். அதற்கு பிறகு தான் இந்த வார்த்தைகள் அப்பாக்களை பிள்ளைகளிடமிருந்து முதலில் அந்நியப்படுத்தியது. 


பிறகு அப்பாக்களையும் கூட, தான் கண்டிப்பானவன் தான் கோபக்காரன்தான் என்று நம்பவைத்தது. இந்த வார்த்தைகள் பெரும்பாலும் அம்மாக்களிடம் இருந்துதான் வந்தது. அதனால் பிள்ளைகள், தன் பெரும்பாலான தேவைகளை அம்மாக்களிடம் முதலில் கொண்டுசெல்லவைத்தது. அம்மா பாசத்தின் உறைவிடமாக மாறினார்கள். இதற்கு பின்னால் அம்மாக்களின் அரசியல் இருந்தது. ஆனால் இதில் அம்மாக்கள் குற்றவாளிகள் இல்லை. சமூகமும் தான்.


திருமணம் முடிந்தவுடனே பெண்கள் தன் வீட்டைவிட்டு பிரிந்து கணவனின் வீட்டில் வந்து வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. என்னதான் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் அமுலில் இருந்தாலும் இன்றளவும் கூட அது நாணயமான முறையில் சமூகத்தில் நடைமுறையில் இல்லை. 


70,80 களில் 2-3 சதவீதம் குடும்பகளில் மட்டும் தான் பெண்களை திருமணத்திற்கு பின்னும் பிள்ளைகளாக கொண்டாடினர். மற்ற 97 சதவிகித குடும்பங்களில் முதல் வளைகாப்பு முடிந்து முதல் குழந்தை பிறக்கும் வரைதான் திருமணமான பெண்களுக்கு தன் அம்மா அப்பா வீட்டில் மவுசு இருந்தது. அதற்கு பிறகு பிறந்த வீட்டு உறவு என்பது முறிந்த அல்லது புறக்கணிக்கப்பட்ட உறவுதான். 


குடும்பங்களில் கணவன் மனைவி சண்டை சச்சரவு என்பது இயல்புதான். அப்படி சண்டை வீராப்போடு தன் வீட்டுக்கு போகும் பெண்களை பிறந்தவீட்டார் அவர்களின் பிரச்சனை என்ன என்று கேட்கும் முன்னரே எப்படியாவது அவளை கணவனின் வீட்டிற்கு அனுப்பவதில் காட்டும் மும்மரமும், கணவன் அப்படி இப்படி இருந்தாலும் பாத்து பக்குவமா நடந்துக்கோம்மா என்ற வார்த்தையுடன் மீண்டும் அனுப்பிவைத்து விடுவார்கள். 


பிறந்த வீட்டில் தான் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதை நன்கு உணர்ந்து, இனி பிறந்து வீடு நமக்கு ஒரு உறவுமுறை வீடுகளில் ஒன்றுதான். அது நம் வீடு இல்லை என்பது அப்பட்டமாக புரிந்துவிட்ட நிலையில் கணவன் மனைவி தொடர வேண்டிய கட்டாயம்.


எந்த ஒரு சின்ன சண்டை சச்சரவிலும் கணவனிடமிருந்து வருகிற முதல் வார்த்தை, வேணும்னா உங்கப்பன் வீட்டுக்கு போடி என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அங்கும் போகமுடியாது. பிறந்த வீட்டில் அண்ணன் தம்பி மட்டுமல்ல அவர்களின் மனைவிகளையும் சேர்ந்தேதான் சமாளிக்கவேண்டும். அந்த நரகத்திற்கு இந்த பேயுடனே வாழ்ந்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிடுவாள். அதற்குள் இரண்டு மூன்று பிள்ளைகள் பிறந்திருக்கும்.


மனைவி உடலளவில் பிறந்தவீட்டை பிரிந்ததைப்போன்றே கணவன் பல சூழ்நிலைகளில் தன் மனைவிப்பக்கம் நிற்பதினால் அவனை அவன் குடும்பமும் மனதளவில் ஒதுக்க ஆரம்பித்திருக்கும். கணவனுக்கும் இதுதான் தன்குடும்பம் என்ற புரிதல் வந்திருக்கும். ஆனாலும் கணவனின் சம்பாத்தியத்தில் மட்டுமே குடும்பம் ஓடுவதால் சில சண்டைகளில் சொல்லிகாட்டுதல்கள் நிகழும். இந்த நிச்சயமற்ற கொடூரமான நிகழ்வுகள் அம்மாக்களின் மனதில் வெகு சுலபத்தில் விலகிவிடுவதில்லை.


இந்நிலையில் பிள்ளைகள் 10 வயதை நெருங்கியிருப்பார்கள். மேலே சொன்ன வார்த்தைகள் குறியீடுகள் பிள்ளைகளை அப்பாகளிடம் இருந்து ஒரு இடைவெளியில் கொண்டுபோயிருக்கும். அப்பாவைப்பற்றிய பிம்பம் பிள்ளைகளின் மனதில் ஆழப்பதிந்திருக்கும். 


அப்பாக்கள் வேலையிலேயே பாதி காலத்தை மாடு மாதிரி கழித்திருப்பார்கள். வீடு வந்தவுடன் பிள்ளைகளிடம் சாப்பிட்டியா, படித்தாயா என்ற வார்த்தைகளைத்தாண்டி ஓரிரு வார்த்தைகள் அதிகமாக பேசிவிடமாட்டார். 


வேலை அசதி, உழைத்து வந்த அலுப்பு, மேலும் தான் கண்டிப்பான கோபமான அப்பா என்ற பிம்பத்தில் அந்த அதிகார போதையில் தன்னை அறியாமலேயே மூழ்கியிருப்பார். அப்பாக்களும் பதின்மவயது பிள்ளைகளுக்கும் பேச்சுவார்த்தைகள் குறைந்திருக்கும். அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொட்டு பேசுதல்கள், பரிசங்கள் முற்றிலும் முறிந்திருக்கும். எந்த ஒரு உறவில் பரிசங்கள் குறைகிறதோ அந்த உறவு நமக்கு தூரத்தில் போயிருக்கும். ஆக மொத்ததில் அப்பா பிள்ளைகளுக்கு அந்நியப்பட்டிருப்பார். 


அதே நேரத்தில் அம்மா நம் தேவைகளை எல்லாம் தீர்க்கும் மனிதியாக இருப்பர். என்னாதான் அப்பாவின் உழைப்பில்தான் தேவைகள் தீர்க்கப்படுமாயினும் அப்பா பிள்ளைகளுக்கு விரோதமாகத்தான் தெரிவார். இந்த வயதில் கல்வி காதல், கூடா நட்பு எதிலும் அம்மா பிள்ளைகளை நேரடியாக எதிர்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. பிள்ளைகள் அப்பாவின் மூலம் தான் எதிர்க்கப்படுவர். ஆக அப்பா பிள்ளைகளின் முழு விரோததிற்கு ஆளகி இருப்பார்.


பிள்ளைகளை பொருத்தவரை அப்பாக்கள் எதையும் குடுப்பத்தில் மனதுவிட்டு பேசிவிடக்கூடியவர் அல்லர். ஆனால் அப்பாக்கள் ஓடி ஓடி உழைத்தது, மனதளவில் புழுங்கியது எல்லாம் தான் குடுப்பத்துக்காகதான்.


தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி,மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால், சூப்பர்வைசர்களால் கடன் கொடுதவர்களால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை அம்மாவைப்போல் சகித்துக் கொள்ளும் ஆத்மா.


பிள்ளைகள் அம்மாக்களுக்கு செய்வதை மட்டும்தான் தன் பாசத்தில் செய்கின்றனர். ஆனால் அப்பாக்களுக்கு செய்வது என்பது வெறும் கடமையாகத்தான் செய்கின்றனர். அப்பாக்கள் இந்த வெறுமையை உறவினர் யாரிடமும் சொல்லவதில்லை என்றைக்காவது தன் நண்பர்களின் சகாக்களோடு சொல்வதுண்டு. 


கடைசிகாலங்களில் அம்மாக்கள் தன் பிள்ளைகளோடு வந்து வாழ்வதில் பிள்ளைகளுக்கும் பிரச்ச்னையில்லை அம்மாக்களுக்கும் பிரச்சனையில்லை. அதுவே அப்பாக்களை தம்மோடு வந்து இருக்க சொல்வதற்கு பல சங்கடங்கள் இருவருக்கும் உண்டு.


அப்பாக்கள் வேற்றுகிரக ஜந்துக்கள் இல்லை. அவர்களும் பாசமுள்ள, பாசத்திற்கு ஏங்கும் மனிதர்கள்தான். அம்மாக்களைப் போன்று பாசமாக, பக்குவமாக, பாந்தமாக பேசத்தெரியாது. ஆனால் தான் சாவை முன்னிட்டு மாதா மாதம் பாலிசி பணம் கட்டுவார்கள். அதுதான் அப்பாக்களின் பாசம். அவர்கள் கண்டிப்பான முரடர்களாக மாற்றுவிக்கப்பட்டவர்கள். அப்படியான அப்பாக்களைத்தான் இந்த சமூகம் நல்ல அப்பாக்கள் என பட்டங்கள் கொடுத்தது. ஏனைய அப்பாக்கள் ஊதாரிகள் என்றே அப்போது அழைக்கப்பட்டனர்.


*அப்பாக்கள் பிள்ளைகளிடன் துண்டிக்கப்பட்டதற்கு காரணங்கள் சமூக, பொருளாதார, காரணங்களே..*


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement