கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் ரூ.1,000 தொகையை பொதுமக்களுக்கு வங்கியில் செலுத்தும் பணி தொடங்கியது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. முன்னதாக ரூ.1 அனுப்பிஉறுதி செய்யப்பட்ட பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதிபயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, இரண்டாவது மாதமான இம்மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றே பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 செலுத்தும் பணி தொடங்கியது. இன்று இரவுக்குள் பயனாளிகள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் பணம் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்துக்காக, இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 56.5 லட்சம்குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதியஇணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள்ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியைபதிவு செய்து, என்ன காரணத்துக்காக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. நிர்வாக குளறுபடிகள் காரணமாகவும் சில தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
9 லட்சம் மேல்முறையீடு: இதையடுத்து, தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்திருந்தது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பத் தலைவிகள் இ-சேவை மையங்கள் மற்றும் இத்திட்டத்தின் திட்ட உதவிமையங்களில் குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
0 Comments