பல்கலைக்கழகங்களில் பட்டியலினத்தவா் (எஸ்சி) மற்றும் பழங்குடி (எஸ்டி) சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்குப் பாகுபாடில்லாத சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உயா்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடு காரணமாக எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சோ்ந்த மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு படித்த தா்ஷன் சோலங்கி என்ற மாணவா் தற்கொலை செய்துகொண்டாா். அந்தக் கல்வி நிறுவனத்தில் நிலவிய ஜாதி பாகுபாடால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உயா்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களின் மரணம் உணா்வுபூா்வமான விஷயம் என கடந்த மாதம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்னைக்கு தீா்வு காண வழக்கத்துக்கு மாறான புதிய முறையில் சிந்திப்பது அவசியம் என்று தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து, இந்த பிரச்னைக்கு தீா்வு காண நிபுணா் குழு ஒன்றை யுஜிசி அமைத்துள்ளது. இதுதொடா்பாக யுஜிசி மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
உயா்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்பான யுஜிசியின் ஒழுங்குமுறை விதிகள் மற்றும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்குப் பாகுபாடில்லாத சூழல் நிலவ கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், அந்த நடவடிக்கைகளை நிபுணா் குழு பரிந்துரை செய்யும்’ என்று தெரிவித்தாா்.
0 Comments