சென்னை அரசு மருத்துவமனையில், கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை, நேற்று அதிகாலை உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் -- அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர். தலையில் நீர் கோர்த்ததற்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, குழந்தையின் வலது கை கறுப்பாக மாறி செயலிழந்து அழுகியது. இதையடுத்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, குழந்தை மாற்றப்பட்டது. அங்கு, குழந்தையின் வலது கை, தோள் பட்டை வரை அகற்றப்பட்டது.
இதனால், வேதனை அடைந்த பெற்றோர், தவறான சிகிச்சையால் குழந்தையின் கையை அகற்றும் நிலை ஏற்பட்டது. குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போர்க்கொடி உயர்த்தினர்; போலீசிலும் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், சிகிச்சை குறித்து விசாரிக்க மூன்று டாக்டர்கள் குழுவை நியமித்தார். அக்குழு விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், 'குறை பிரசவத்தில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையுடன், தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால், மூளை மண்டலத்தில் உள்ள நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன.
'குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறில்லை. குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டு உள்ளது' என்று கூறப்பட்டு இருந்தது.
குழந்தைக்கு, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குழந்தை நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.
இதுகுறித்து, மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை:
குழந்தை முகமது மகிர், குறை பிரசவத்தில், 1.5 கிலோ எடையுடன், 32 வாரத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூளையில் நீர் கசிவு பிரச்னை இருந்தது.
இந்த நீர் கசிவை உறிஞ்சி எடுப்பதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. வைட்டமின் டி, ஊட்டச்சத்து, வளர்திறன் குறைபாடு உள்ள குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதனால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால், குழந்தையின் ரத்தத்தில் நச்சுக்கள் கலந்ததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. குழந்தைக்கான சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை.
மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 5.42 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments