தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தமிழ்நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக அனேக இடங்களில் வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை கூடுதலாக இருந்தது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்ப நிலை காணப்பட்டது. இதற்கிடையே பாளையங்கோட்டையில் அதிகபட்ச வெயில் 104 டிகிரி அளவில் கொளுத்தியது.
பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையும் வெயி்ல் இருந்தது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழையும் பெய்தது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி கோமுகி அணை 70மிமீ மழை பெய்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம், கச்சிராபாளையம், காரையூர், வந்தவாசி, தியாகதுருகம், அரிமளம், விரகனூர், வால்பாறை, சோலையார், பாபநாசம், கலவை, அன்னவாசல், திருவாடானை, புலிப்பட்டி, சின்னக்கல்லார் 20மிமீ பெய்துள்ளது. இந்நிலையில், வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் இன்றும் நாளையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெயில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 100 டிகிரி வெயில் இருக்கும்.
0 Comments