Ad Code

Responsive Advertisement

வீடுகளில் மின் Smart Meter பொருத்தும் பணி தொடங்கும்

 



தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி தொடங்கும் என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. 


இதில், விவசாயத்துக்கான மின்சாரம் இலவசம். வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். உயரழுத்த மின் கணக்கீடு மாதம்தோறும் நடைபெறுகிறது. தற்போது வீடுகளில் மின்சாரத்தை கணக்கீடு செய்ய ஸ்டேடிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையிலேயே மின் அளவு கணக்கிட்டு நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சில ஊழியர்கள் தாமதமாக மின் பயன்பாட்டு அளவை கணக்கெடுப்பதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. 


இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது. இதற்காக, ஸ்மார்ட் மீட்டரில் தகவல் தொழில்நுட்ப சாதனம் பொருத்தி மின்வாரிய அலுவலக சர்வருடன் இணைக்கப்படும்.


கணக்கெடுக்கும் தேதி கணினியில் மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், அந்த தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு மின் பயன்பாடு கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும். 


ஊழியர்கள் வீடு வீடாக இனி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தானியங்கி முறையில் மின் கட்டண விவரம் எஸ்.எம்.எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். கடைசி தேதிக்குள் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லையென்றால், மின் விநியோகம் தானாக துண்டிக்கப்படும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.


ஆனால், விடுமுறை நாட்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 


இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விரைவில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.


இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. தற்போது இதில் 2 கட்டங்களுக்கு டெண்டர் பணிகள் முடிந்துள்ளது. 


மதுரை, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நெல்லை ஆகிய மண்டலங்களில் முதல் மற்றும் இரண்டாவது கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் 3வது கட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 3வது கட்ட பணிக்கு விரைவில் டெண்டர் கோரப்படும்.


ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கி 2025ம் ஆண்டு மார்ச் மாததிற்குள் முடிக்கப்படும். விவசாய இணைப்புகள் மற்றும் குடிசை இணைப்புகளை தவிர அனைத்து தாழ்வழுத்த மின்சார இணைப்புகளுக்கு புதுபிக்கப்பட்ட விநியோக திட்டத்தின் கீழ் மொத்தம் 1.17 கோடி ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 


இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மட்டும் அதிகபட்சமாக 59 லட்ச மீட்டர்கள் வழங்கப்படும். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 3 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும். ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மென்பொருளை கொண்டு இருக்கும் இடத்தில் இருந்தே மின் பயன்பாட்டை கணக்கீடு செய்ய முடியும். மேலும் மனித தவறுகளை தவிர்க்க முடியும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement