Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு துறைகளில் பணி - சமவாய்ப்பு கொள்கை முறை

 



மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு பணியில் சேர கண்டறியப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடந்த மானிய கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். 


அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் கீழ், அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார்.


அந்தவகையில், அதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில், முதல்வரின் அறிவிப்பின்படி, அனைத்து அரசு துறைகளில் உள்ள ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்தி அப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பாக நடவடிக்கையினை அரசின் அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டும்.


மேலும், அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளின் விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் ஒரு முறை மட்டுமே தளர்வுகள் வழங்கி அக்காலிப்பணியிடங்களை அந்தந்த துறைகளின் தலைவர்கள் மூலம் நிரப்பிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி, அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,095 பின்னடைவு பணியிடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இதில் சி,டி, பிரிவில் அனைத்து பணியிடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், ஏ மற்றும் பி பிரிவிலும் 559 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவை என கண்டறியப்பட்டுள்ளன. 


இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு துறையில் உகந்த பணியிடங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக குரூப் ஏ, பி, சி மற்றும் டி வகைகளாக பிரித்து, அதன்படி, கண் பார்வையற்றவர், செவித்திறன் கேட்காதவர் உள்ளிட்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் என்ன வேலையை செய்வார்கள் என்பதை கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டது. 


மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப் சி மற்றும் டி பிரிவில் அனைத்து பணியிடங்களுமே உகந்த பணியிடங்களாக அரசு ஆணையிட்டுள்ளது. தொடர்ந்து, அந்த குழுவினர் முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டு ஏ மற்றும் பி பிரிவில் துறை வாரியாக 559 பணியிடங்களை கண்டறிந்துள்ளனர். இருப்பினும், சி மற்றும் டி பிரிவினர் காவல்துறை உள்ளிட்ட சில துறைகளில் வேலைக்கான சூழலை கருத்தில் கொண்டு அரசின் ஆணையில் இருந்து விலக்கு கேட்கின்றனர். மூன்று விஷயங்கள் இதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.


* மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்ற சவுகரியத்தை அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ ஏற்படுத்தி தர வேண்டும்

* மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை வேலை தருபவர்கள் உறுதி செய்தல்.

* மாற்றுத்திறனாளிகளால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்தல்


இந்த 3 விஷயங்களை கடைபிடித்து தான் பணியிடங்களில் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் பணி செய்யக்கூடிய இடங்களில் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனரகம் சார்பில் அதிகாரிகள் எந்த நேரத்திலும், ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பார்கள், அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கத்தக்க வகையில் வசதிகள் இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு. இதுபோல, பல்வேறு விஷயங்கள் மாற்றுத்திறனாளிகள் பணியிடங்களில் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு கூறினர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement