கால மாற்றத்திற்கேற்ப தகவல் பரிமாற்றம் செய்ய புறா, தந்தி, தபால், பேஜர் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்கு, ஒருவர் தகவல்களை பரிமாற்றம் செய்ய டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் டெலிபோன் இருப்பதே அரிதாக காணப்பட்டது.
1996ம் ஆண்டு செல்போன் பயன்பாட்டுக்கு வந்த தொடக்கத்தில், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்பாட்டுக்கு வந்தது.
அதன்பின்னர் பணம் அனுப்புவது, பணம் பெறுவது, அனைத்து வகையான கட்டணங்களை செலுத்துவது, சினிமா டிக்கெட் தொடங்கி எந்த பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலும், கையில் செல்போனுடன் சென்றால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து தகவல் பரிமாற்றமும் தற்போது செல்போனில் தான் நடந்து வருகிறது. ஆண்ட்ராய்ட் செல்போன் வந்த பிறகு பலருக்கு தங்களது செல்போன் எண், குடும்பத்தில் உள்ளவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட பல விவரங்கள் செல்போனில் பதிந்து வைத்துள்ளனர்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல மணி நேரம் செல்போன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் முழ்கி கிடக்கின்றனர். ஐந்து வயது முதல் 18 வயது உள்ள சிறுவர்கள், சிறுமிகள் பல மணி நேரம் செல்போனில் செலவழிப்பதால் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் செல்போன் இல்லை என்றால் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தைகள் அதிகமாகிவிட்டது. செல்போன்களில் பல மணி நேரம் தொடர்ந்து கேம் விளையாடுவதால் தூக்கத்தில் கூட குழந்தைகள் அதே மனநிலையில் உள்ளனர்.
பெற்றோர்களும், குழந்தைகளின் அழுகையை போக்க, செல்போனை கொடுத்துவிடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் செயல்கள் அனைத்தும் செல்போனில் கேம் விளையாடுவது போல் இருந்தது.
இதேபோல் மற்றொரு சிறுவன் துப்பாக்கி சுடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் சிறுவர்கள் 22 சதவீதம் பேர் இணையதளத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதுவும் ஒரு மனநிலை சார்ந்த பாதிப்பாக கருதப்படுகிறது.
இதுபோன்ற இணையதள அடிமைகளை மீட்க அரசு மருத்துவமனையில் இணையதள அடிமை நோய் மீட்பு மையம் தொடங்க அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 35 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இணையதளம், செல்போனுக்கு அடிமையானவர்கள் மீட்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் குழந்தைகள் மனநல டாக்டர்கள், குழந்தைகள் நலன் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். இணையதளத்தில் மூழ்கி வெளியேற முடியாமல் பாதிக்கப்படும் சிறுவர்கள் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதலில் அவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால் மனநல டாக்டர்கள் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். எளிதில் மீட்கக்கூடிய நபர்களாக இருந்தால் கவுன்சலிங் மூலம் குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண பாதிப்பு இருந்தால் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மையங்களின் மூலம் கடந்த 18 மாதங்களில் செல்போனுக்கு அடிமையாகி இருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 5 ஆயிரம் பேர் வரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் இணையதள சட்டம் 2017ம் ஆண்டு தகவல் படி 2023ல் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 67 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் மாணவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
* ஓடி விளையாடினால் நோய்கள் ஓடிவிடும்
சூரிய வெளிச்சம் படும்படி விளையாடும் போது வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வியர்வை மூலம் வெளியேறுகிறது. அணியாகச் சேர்ந்து விளையாடும்போது கூட்டு முயற்சியின் முக்கியத்துவமும், விட்டுகொடுத்தல், தன்னம்பிக்கை போன்ற நல்ல குணநலன்களும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அனைத்துத் தசை நார்களும் சீராக இயங்குவதால் உடல் பருமன், மன அழுத்த பிரச்னை வருவதில்லை என்று டாக்டர்கள் கூறினர்.
* பெற்றோர்களுக்கு டாக்டர்கள் அட்வைஸ்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இணையதளம், செல்போன்களுக்கு அடிமையானவர்கள் மீட்பு மையம் தொடங்கப்பட்டது.
கடந்த 18 மாதங்களில் மையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து கவுன்சலிங் தேவைப்படும் சிறுவர்களுக்கு செல்போன் பயன்பாட்டினை குறைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளின் முன்பாக செல்போன் பயன்படுத்துவதையும், குழந்தைகளுக்கு செல்போன் வழங்குவதையும் தவிர்க்க வேண்டும். அடம் பிடிக்கிறார்கள் என்பதால் ஒவ்வொரு முறையும் செல்போன் கொடுத்தே சமாதானம் செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
இந்த பழக்கம் தான் காலப்போக்கில் அடிமையாக்கி விடுகிறது. குழந்தைகளுடன் பேசி, அவர்களை வியர்வை வரும் வகையில் விளையாட வைக்க வேண்டும். செல்லபிராணி, கார்டன் பராமரிப்பு உள்ளிட்டவைகளில் நேரம் செலவிட வேண்டும்.
சமூக வலைதளங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. செயலிகள் மூலம் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். ஒரு நாள் செல்போன், இணையதளம் பயன்பாடு இல்லாமல் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்.
இந்த மையத்திற்கு வருபவர்களுக்கு முதலில் கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. இதில் அவர்கள் எந்த அளவிற்கு செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது தெரிந்து விடும். இதையடுத்து, மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* போதையை போன்றது வீடியோ கேம்
குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது முதல் 3 ஆண்டுகள் அபரிதமாக இருக்கும். அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டு படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவுகளை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும்.
இதுவும் ஒரு போதைப் பழக்கத்தைப் போன்றதுதான். பெரும்பாலான பெற்றோர்களே, குழந்தைகளிடம் செல்போன், லேப்டாப் போன்றவற்றை கொடுத்து வீடியோ கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்குகின்றனர்.
0 Comments