இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் எனவும் அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், பின்னர் உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் எழுதிய கடிதங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரிய கருப்பன், முத்துசாமி ஆகியோரும், திமுக எம்பி ஆ.ராசா, எம்பியும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க எந்த வகையிலாவது ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், கடிதத்தில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆளுநரின் நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆளுநருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசு அமைச்சரவை பற்றியோ உங்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் கேட்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நீங்களே அறிக்கையை வெளியிட்டு விட்டு, அதை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளீர்கள்.
அதுவும் அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து விட்டு சொல்வதாக கூறியிருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் யாரையும் ஆலோசிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. அமைச்சரை நீக்க சொல்வது, சேர்க்க சொல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விரும்பதகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறியது சரியல்ல. எப்போதும் தமிழ் கலாசாரத்தின் படி மரியாதையாகதான் தங்களை நடத்தி வந்துள்ளோம். அதற்காக தங்களின் சட்டவிரோத உத்தரவுக்கு பணிய வேண்டும் என அர்த்தம் இல்லை.
அதோடு நீங்கள் ஒரு சார்பு தன்மையுடன் செயல்பட்டுள்ளீர்கள். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களின் ஒரு சார்பு தன்மை தான் உங்களின் நோக்கம் சிபிஐ குட்கா வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறிய போதும் நடவடிக்கை இல்லை. இதன் மூலம் தங்கள் இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது.” என தெரிவித்துள்ளார்.
அதேபோல செந்தில் பாலாஜியை விசாரணைக்காக மட்டுமே அமலாக்கத்துறை கைது செயதுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. எனவே செந்தில் பாலாஜி விசாரணையில் தலையீடுவார் என்பது அடிப்படையற்றது. அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீக்கம் செயவதோ முதல்வரின் முடிவுகளுக்கு உட்பட்டது. பதவிப்பிரமாணம் செய்துவைக்க மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ” என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமில்லை என்றும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
0 Comments