பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாயும்; டீசல் விலையை, 5 ரூபாய் வரையும் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
கொரோனா தொற்றால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், 2020, 2021ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது.
இதனால், உள்நாட்டில் லிட்டர் பெட்ரோல், டீசல் விலை தலா, 100 ரூபாயை தாண்டியது. மத்திய அரசு, 2021ல் தீபாவளி பரிசாக, தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசலுக்கு, 10 ரூபாயும் குறைத்தது.
அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில், 106.66 ரூபாய்க்கு விற்பனையான லிட்டர் பெட்ரோல் விலை, 101.40 ரூபாயாகவும்; 102.59 ரூபாய்க்கு விற்கப்பட்ட லிட்டர் டீசல், 91.43 ரூபாயாகவும் குறைந்தன.
பின், அவற்றின் விலை அதிகம் உயர்த்தப்படவில்லை. கடந்த 2022 துவக்கத்தில் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் துவங்கிய போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அதற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் மே 21ல் லிட்டர் பெட்ரோல், 110.85 ரூபாய்க்கும்; டீசல், 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. அன்றிரவு, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு, 8 ரூபாயும்; டீசலுக்கான வரியை, 6 ரூபாயும் குறைத்தது.
அடுத்த நாள் லிட்டர் பெட்ரோல் விலை, 102.63 ரூபாயாகவும்; டீசல், 94.24 ரூபாயாகவும் குறைந்தன.
ஓராண்டிற்கு மேலாகியும் அந்த விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ள சூழலில், தெலுங்கானா, ம.பி., - ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
எனவே, பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாயும்; டீசல் விலையை, 5 ரூபாய் வரையும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
0 Comments