சார்ஜ் போட்டபடி செல்போன் பேசிய டீ மாஸ்டர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கேனால் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (22). தனியாக வசித்து வந்த இவர், மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த காமராஜ், செல்போனில் சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது செல்போன் அழைப்பு வந்ததால், சார்ஜ் போட்டபடியே அவர் பேசிக்கொண்டு இருந்தார். தீடீரென சார்ஜர் வெடித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments