தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் ரத்தசோகையை கட்டுப்படுத்த 112 மாவட்டங்களை லட்சிய மாவட்டங்களாக தேர்வு செய்து, அதில் தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் கடந்த 2020 முதல் அறிமுக திட்டமாக திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுவினியோக திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுவினியோகத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றிய அரசு அந்த்யோதயா அன்ன யோஜனா, பிஎச்எச் ரேஷன் கார்டுகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கி வருகிறது. இதற்காக அரிசி ஆலைகளில், நெல்லை அரிசியாக மாற்றும்போது, 1 கிலோ அரிசி மாவாக அரைக்கப்பட்டு, இரும்பு சத்து, ‘போலிக் அமிலம், வைட்டமின் பி 12’ ஆகிய சத்துக்கள் அடங்கிய கலவை சேர்க்கப்படும். அந்த கலவை பின், அரிசி வடிவில் மாற்றப்பட்டு, 100 கிலோ சாதாரண அரிசிக்கு, 1 கிலோ என்று கலந்து, செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது, அந்த்யோதயா அன்ன யோஜனா, பிஎச்எச் ரேஷன் கார்டுகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில், என்பிபிச்பிச் ரேஷன் கார்டுதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த மாதம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு
ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என பொதுமக்கள் கூறி வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசி இல்லை. அது மக்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் தயாரிக்கப்பட்ட உணவை 500 பேருக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0 Comments