விடுமுறை தினத்தில் வீட்டில் சும்மா இருக்காமல், சமையல் பணி செய்து வந்த கல்லூரி மாணவன், எதிர்பாராத விதமாக ரசம் கொதித்து கொண்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்ததில் உடல் வெந்து பலியானார். சென்னை மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் வேலு (50). கார்பென்டர்.
இவரது மகன் சதீஷ் (25). இவர், கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அவ்வப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில், கேட்டரிங் எனப்படும் சமையல் வேலை செய்து சம்பாதித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி மீஞ்சூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சதீஷ் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த அடுப்பில் திருமணத்தில் பரிமாறுவதற்கான ரசம் அகலமான பெரிய பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்தது.
இந்நிலையில் ரசத்தை கலக்க போன நிலையில், சதீஷ் எதிர்பாராத விதமாக திடீரென கால் இடறி, நிலைதடுமாறி சூடாக ரசம் கொதித்து கொண்டிருந்த அண்டாவிற்குள் விழுந்து மூழ்கினார். இதனால் அவரது உடல் முழுவதும் வெந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக அவரை ரச அண்டாவில் இருந்து வெளியே எடுத்தனர்.
உடல் முழுவதும் வெந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அங்கிருந்த சக நண்பர்கள் உட்பட விழாவிற்கு வந்தவர்கள் இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அவரை மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவன் சதீஷ் பரிதாபமாக பலியானார். இப்புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments