நாடு முழுவதும் இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தினமும் ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ ஆட்சி அமைந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
ரூ.2000 நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் வந்ததும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. எளிதாக பணம் எடுத்துச்செல்ல வசதியாக இருப்பதாகவும், இதனால் பதுக்கப்படுவதாகவும், சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டப்பட்டன. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது மெதுவாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளவும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு மாற்றாக பணப்புழக்கத்திற்கு வசதியாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு மதிப்பு அளவுக்கு மற்ற ரூபாய் நோட்டுகள் வரும் வரை ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் கடந்த 2018-19ல் போதுமான ரூபாய் நோட்டுகள் இருந்ததால் புதிதாக ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
2017 மார்ச் மாதத்திற்கு முன்பு அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட 89 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 4 முதல் 5 ஆண்டு காலம் மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. 2018 மார்ச் மாதம் அதிகபட்சமாக ரூ.6.73 லட்சம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் 37.3 சதவீதம் ஆகும். அதன்பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டது. 2023 மார்ச் மாத முடிவில் ரூ.3.62 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன் மூலம் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மதிப்பு 10.8 சதவீதமாக குறைக்கப்பட்டது.
மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொதுவான பரிவர்த்தனைக்கு மக்கள் பயன்படுத்துவது இல்லை என்பதும் தெரியவந்தது. எனவே மக்கள் பயன்பாட்டிற்கு மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு வழங்கப்பட்டுள்ளன. இதை எல்லாம் கருத்தில் கொண்டும், ரிசர்வ் வங்கியின் சுத்தமான நோட்டு கொள்கை அடிப்படையிலும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லும். 2013-14ல் இதே போல் சில ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். அல்லது ஏதேனும் ஒரு வங்கிக் கிளையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளாக பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம். வங்கிக் கணக்குகளில் எந்தவித கட்டுப்பாடுமின்றி விதிகளுக்கு உட்பட்டு டெபாசிட் செய்யலாம். ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது.
வங்கிகளின் செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் வரும் மே 23 முதல் எந்த வங்கியிலும் ஒரே நேரத்தில் ரூ.20,000 ரூபாய் நோட்டுகளை( 10 நோட்டுகள்) மற்ற வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். இதுதொடர்பாக வங்கிகளுக்கு தனியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகளை வங்கி ஏஜென்ட்கள் மூலம் ஒரு கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.
வரும் செப்.30க்குள் இந்த நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக்கொள்ளவும், வங்கியில் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் போதுமான வசதியை வழங்குமாறு அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மே 23 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரை ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படும். இதன் அடிப்படையில் அனைத்து வங்கிகளும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதை உடனே நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. எனவே செப்.30ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பொதுமக்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம்.
* வங்கி விதிமுறைக்கு உட்பட்டு, ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம்.
* ரூ.2,000 நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு வங்கிகளில் மாற்ற முடியாது.
* பொதுமக்கள் மே 23 முதல் ஒரே நேரத்தில் ரூ.2000 நோட்டுகளை ரூ.20,000 (10 நோட்டுகள்) வரை மாற்றிக்கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்
* 2016 நவம்பர் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* அதிகபட்சமாக ரூ.6.73 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
* 2005க்கு முன்பு புழக்கத்தில் இருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக 2014 ஜனவரியில் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
* 2018-19 முதல் புதிய ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது
* ரூ.2,000 நோட்டுகளில் 89 சதவீதம் மார்ச் 2017க்கு முன்பு வெளியிடப்பட்டது.
* ரூ.1000 நோட்டு மீண்டும் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை – ப.சிதம்பரம்
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடியது அல்ல. கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 2016 நவம்பரில் நாங்கள் இதைச் சொன்னோம், நாங்கள் சொன்னது சரி என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டு கட்டுக்கட்டாக வழங்கப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனி 1000 ரூபாய் நோட்டை அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
* 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பிரதமர் மீது காங். தாக்கு
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக தாக்கியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்ரமேஷ் கூறுகையில்,’ தனக்கு தானே விஸ்வகுரு பட்டம் சூட்டிக் கொண்டவர் முதலில் நடவடிக்கை எடுத்துவிடுவார். அதன்பின்னர்தான் அவர் சிந்திப்பார். 2016 நவம்பர் 8ல் அவ்வளவு ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் இப்போது திரும்பப் பெறப்படுகின்றன’ என்று குறிப்பிட்டார்.
* செல்லாமல் போன நோட்டுக்கள்: 2016ல் ரூ.15.44 லட்சம் கோடி; 2023ல் ரூ.3.62 லட்சம் கோடி
கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அப்போது, ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இதில், ரூ.15.28 லட்சம் கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இப்போது, ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட உள்ளது.
0 Comments