தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் 104 டிகிரியும், 13 மாவட்டங்களில் 100 டிகிரியும் வெயில் கொளுத்தியது. இதையடுத்து 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக நாகர்கோவில், கன்னியாகுமரி, பொள்ளாச்சி, மயிலாடி, கோவை 30மிமீ ஆகிய இடங்களில் மழை பெய்தது. கூடலூர், சேலம், திருப்பூர், போடி, திற்பரப்பு, தேன்கனிக்கோட்டை 20 மிமீ, மழை பெய்துள்ளது.
இருப்பினும், மதுரை, திருப்பத்தூர், திருச்சி, வேலூர், சென்னை, கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. திருத்தணி, தஞ்சாவூர், சேலம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, நாகை, கடலூர், ராஜபாளையம், விளாத்திக்குளம், நெல்லை உள்பட 13 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது.
கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ், கோவை, சேலம், திருப்பத்தூர் பகுதிகளில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக 23ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
0 Comments