Ad Code

Responsive Advertisement

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை

 



 தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மாயம் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மே 6 முதல் 9 வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement