திண்டுக்கல்லில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் பாரம்பர்ய முறைப்படி சகோதரியின் மகளுக்கு ஊரே வியக்கும் அளவுக்கு சீர்வரிசை செய்து அசத்தியுள்ளனர் தாய்மாமன்கள்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கிழக்குச் சீமையிலே பட பாணியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்றதை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் வியந்து பார்த்து ரசித்தனர்.
தமிழர்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்தால் அதில் பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம் நிறைந்து இருப்பதை காணலாம். ஒவ்வொரு விழாக்களிலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கின்றனர். குறிப்பாக காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட விழாக்களுக்கு தாய் மாமன்கள் போட்டி போட்டு சீர் எடுத்து வருவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், தமிழகத்தின் பழமை மாறாமல் திண்டுக்கல்லில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் 12 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது. இதை அப்பகுதியில் பொதுமக்கள் கண்டு வியந்து ரசித்தனர்.
திண்டுக்கல் முருக பவனத்தைச் சேர்ந்த ஜெயபால். டீக்கடை தொழிலாளி இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ரம்யாவின் பூப்புனித நீராட்டு விழா, அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
ஜெயபால் மனைவியின் உடன் பிறந்த சகோதரர்கள், பழனி ரோட்டில் உள்ள லாரி செட் அருகில் இருந்து தாய்மாமன் சீராக 12 மாட்டு வண்டிகளில் பாரம்பர்ய முறை மாறாமல் தாம்பாள தட்டில் தேங்காய், கருப்பட்டி, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள், பேரிச்சம்பழம், பூக்கள், பட்டு புடவைகள், வண்ண சுவை உடைய இனிப்பு வகை பலகாரங்கள், பித்தளை பாத்திரங்கள் என தட்டுக்களுடன் வாண வேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
இதற்கு மேலாக தாய்மாமன் சீராக ஆடுகள், வாழைத்தார்கள் உள்ளிட்ட பொருள்களை மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலம் ஆக வாண வேடிக்கையுடன் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்றதை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்களும் வியந்து பார்த்து ரசித்தனர்.
0 Comments