Ad Code

Responsive Advertisement

4 நாட்கள் விடுமுறை - வங்கி சேவை கடுமையாக பாதிக்கும்

 

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் இன்று முதல் 4 நாட்கள் விடுமுறையால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும். அதே நேரத்தில் ஏடிஎம் சேவையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.


நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 12ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.


இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 10 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரம் வங்கி கிளைகளில் பணியாற்றும் சுமார் 65,000 பேர் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள உள்ளனர். அதே நேரத்தில் இன்று மாதத்தின் 4வது சனிக்கிழமை எனபதால் வங்கிகளுக்கு விடுமுறை நாள் ஆகும். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என 2 நாட்கள் விடுமுறை வருகிறது. அதே நேரத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.


இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை 4 நாட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதாவது பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது வழக்கம். ஆனால், வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால், வங்கி ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement