அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று (டிச.,7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தார்.
இது தொடர்பாக கோவை செல்வராஜ் கூறியதாவது: தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினை தவிர, மற்ற எந்த தலைவருக்குமே தகுதியில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையினால், அதிமுக.,வில் தொடர விருப்பமில்லை; அதனால் விலகி திமுக.,வில் இணைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1991 - 96ம் ஆண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், கோவை செல்வராஜ். அ.தி.மு.க., - காங்., கூட்டணி முறிந்த பின், சட்டசபையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆதரவு காங்., - எம்.எல்.ஏ.,வாக, கோவை செல்வராஜ் செயல்பட்டார். அப்போது அவர், 'ஜெயா' காங்., - எம்.எல்.ஏ., என அழைக்கப்பட்டார்.
தமிழக காங்., சேவாதள மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பின் காங்கிரசில் இருந்து விலகி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.,வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வை ஆதரித்தார். அவருக்கு அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
கடந்த, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால், பழனிசாமி மீது அதிருப்தி அடைந்தார்; பன்னீர்செல்வம் தலைமையை ஆதரித்தார்.
பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.,வில், கோவை மாநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார். அவருக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கும் கோஷ்டி மோதல் உருவானது. இதையடுத்து, மாவட்ட செயலர் பதவியை ராஜினாமா செய்து தற்போது திமுக.,வில் ஐக்கியமாகியுள்ளார்.
0 Comments