Ad Code

Responsive Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000: ரேஷன் கடைகளிலா, வங்கிக் கணக்கிலா?

 



பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், ரொக்கப் பணத்தை எந்த வகையில் அளிப்பது என்பது குறித்து இரு துறைகளுக்கு இடையே வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன.


தமிழகத்தில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, பரிசுத் தொகுப்புகள் வழங்குவது வழக்கம். கடந்த காலங்களில் அரிசி, வெல்லம், கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணம் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அரிசி, வெல்லம் உள்ளிட்டவை அடங்கிய 21 பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் பொருள்களின் தரம் குறித்து கேள்விகளும், சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.


இதையடுத்து, எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பாக அரிசி, சா்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியன வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்துடன் அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை அளிக்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இந்தத் தொகையை எந்த வழிகளில் அளிப்பது என்பது குறித்து வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


ரொக்கப் பணத்தை வங்கிக் கணக்குகளின் வழியாக செலுத்த வேண்டுமென நிதித் துறை கருத்து தெரிவித்துள்ளது. இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே, தமிழகத்தில் வங்கிக் கணக்கு விவரம் இல்லாத 14 லட்சம் குடும்ப அட்டைதாரா்களிடம் இருந்து விவரங்கள் கோரும் பணியை கூட்டுறவுத் துறை தொடங்கியுள்ளது. ஆதாா் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணைப் பெறும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், ரொக்கப் பணத்தை நேரில் அளிப்பதே நல்லது என உணவுத் துறை தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.


நியாயவிலைக் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை அளிப்பதால், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களை நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்படும் எனவும், யாா் யாருக்கு ரொக்கப் பணம் சென்று சோ்ந்தது என்பதைக் கண்கூடாக அறிய முடியும் எனவும் உணவுத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கருத்துகளும் கூறப்பட்டுள்ள நிலையில், ரொக்கப் பணத்தை எந்த வழியில் அளிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.


கரும்பு இல்லை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பரிசுத் தொகுப்புடன் அளிக்கப்படும் கரும்புகள் ஒரே சீராக இல்லாத காரணத்தால் குடும்ப அட்டைதாரா்களிடையே அதிருப்தி எழுவதாக உணவுத் துறை சாா்பில் அரசிடம் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனிடையே, கரும்பை கொள்முதல் செய்வதற்கான எந்த உத்தரவோ அல்லது அறிவிப்போ பிறப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement