தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். தருமபுரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: கருத்தரங்கில், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், ஆட்சிமொழி ஆய்வும், குறைகள் களைவு, ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிப்பயிற்சி உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும், தமிழ் மொழி நம் தாய்மொழி என்பதால் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் தமிழில் கையெழுத்திட வேண்டும். தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி, தலைவர்கள் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 42 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஜெயஜோதி, தமிழ்ச் சங்க செயலாளர் சவுந்தர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments