:தமிழகத்தில் நேற்று துவங்கிய பிளஸ் 2 தேர்வில், 8.04 லட்சம் மாணவ - மாணவியர் ஆர்வமுடன் தேர்வுகள் பங்கேற்றனர்; 33 ஆயிரம் பேர் பங்கேற்வில்லை. பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு நேற்று துவங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று, தமிழ் உள்ளிட்ட மொழி பாட தேர்வுகள் நடந்தன. தேர்வில், 7,506 பள்ளிகளை சேர்ந்த, 8.37 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 33 ஆயிரம் பேர் நேற்று பங்கேற்கவில்லை.
மற்ற 8.04 லட்சம் மாணவ - மாணவியர் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதினர். சென்னை புழல் உள்ளிட்ட எட்டு மத்திய சிறைகளில், ஏழு பெண் கைதிகள் உட்பட, 63 கைதிகள் தேர்வு எழுதினர். ஆங்கில பாடத்திற்கு வரும் 9ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. பிளஸ் 2 தேர்வு வரும் 28ம் தேதி நிறைவடைகிறது.
10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்!
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவங்குகிறது. இதில், 9.55 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னையில், 552 பள்ளிகளை சேர்ந்த, 47 ஆயிரம் மாணவ - மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் மட்டும், 16 ஆயிரத்து, 802 மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக மாநிலம் முழுதும், 3,936 தேர்வு மையங்கள்; தனி தேர்வர்களுக்கு, 147 மையங்கள் மற்றும் சிறை கைதிகளுக்கு ஒன்பது மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறை கண்காணிப்பு பணியில், 51 ஆயிரம் ஆசிரியர்களும், பறக்கும் படையில், 4,291 ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். வினாத்தாள்கள், 308 மையங்களில் இருந்து வினியோகம் செய்யப்படுகின்றன.
தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று மொழி பாடத்துக்கு தேர்வு நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் பகல், 1:15 மணி வரை தேர்வு நடக்கிறது. அனைத்து பாடத் தேர்வுகளும், வரும் 30ல் தேர்வுகள் முடிகின்றன. ஜூன் 17ல் தேர்வு முடிவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments