பள்ளிக் கல்வித்துறை சார்பில், 181 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, பல்வேறு கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் , 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
* பள்ளிக் கல்வித்துறை சார்பில், நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், மாவட்ட கனிமவள நிதி ஆகியவற்றின் வழியாக, 181.03 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 208 அரசு பள்ளிக் கட்டடங்கள் உட்பட பல்வேறு கட்டடங்களை, நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் திறந்து வைத்தார்.
* திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ், ஐந்து நுால்கள்; இளந்தளிர் இலக்கிய திட்டத்தின் கீழ், 23 சிறார் நுால்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கல்கி எழுதிய, 'பொன்னியின் செல்வன்' நாவல்; எழுத்தாளர் செல்லப்பாவின் புகழ்பெற்ற 'வாடிவாசல்' குறு நாவல், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
* கவிஞர் வெண்ணிலா தொகுத்த, 'மீதமிருக்கும் சொற்கள்' என்ற சிறுகதை தொகுப்பு, 'தமிழ்ப் பெண் கதைகள்' என்ற தலைப்பில்; பூமணியின், 'வெக்கை' என்ற நாவல், மலையாளத்தில் 'உஷ்ணம்' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நுால்களையும், ஓவியங்களுடன் கூடிய, 23 சிறார் படைப்புகளையும், முதல்வர் வெளியிட்டார்
* குழந்தை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 18 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்கள் சக்தி, சுபிஷா, ருத்ரவேல் ஆகியோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை, கேடயம், சான்றிதழ் ஆகியவற்றுடன் கவிமணி விருதையும் முதல்வர் வழங்கினார்.
'கூகுள்' உடன் ஒப்பந்தம்
அரசு பள்ளி மாணவர்கள், தொழில்நுட்ப உதவியுடன், எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள வசதியாக, 'Google Read Along' என்ற மொபைல் போன் செயலியை பயன்படுத்திக் கொள்ள, பள்ளிக் கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மகேஷ், தலைமைச் செயலர் இறையன்பு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி, கூகுள் நிறுவன அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
0 Comments