தோழியுடன் விளையாடிய போது, மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் சிந்து, விடாமுயற்சியால் நேற்று பிளஸ் 2 தேர்வை எழுதத் துவங்கி, தன்னம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம், வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் சக்தி, 43. இவர், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சைக்கிளில் சென்று, டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி, 36. இவர்களுக்கு சிந்து என்ற பிளஸ் 2 படிக்கும் மகளும், சுந்தரேஸ்வரா என்ற 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் சிந்து கணிதவியல் படித்து வருகிறார். கடந்த 2020 டிசம்பரில், தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன; தாடையின் ஒரு பகுதி முழுதும் சேதமடைந்தது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், உயிர் தப்பிய சிந்து இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே உள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்கள், தோழியர் தரங்கிணி, ஹேமலதா, மதிவதனி ஆகியோர் உதவியுடன் வீட்டில் இருந்தபடி கல்வி பயின்று, நேற்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதத் துவங்கி உள்ளார்.அவரால் நீண்ட நேரம் ஓர் இடத்தில் அமர்ந்திருக்க முடியாது. அவருக்காக பிரத்யேக படுக்கை வசதியுடன், தனி தேர்வு அறை தயார் செய்யப்பட்டு, அவர் சொல்ல சொல்ல, இன்னொருவர் தேர்வை எழுதினார்.மாவட்ட அளவில் வாலிபால் வீராங்கனையாக திகழ்ந்த சிந்து, மீண்டும் எழுந்து, வாலிபால் ஆட வேண்டும் என்ற கனவுடன் உள்ளார்.
'கல்வி தான் இன்னல்களை உடைக்கும்'
சிந்து கூறியதாவது:என் கையால் தேர்வு எழுத முடிவில்லை என்ற கவலை இருந்தது. எனக்காக தேர்வு எழுதுபவர், அந்தந்த பாடம் குறித்து அறிந்தவராக இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும். வீட்டில் இருந்து ஆட்டோவில் தான் தேர்வு மையத்திற்கு செல்கிறேன். போகும் வழியில் சாலைகள் சரியில்லாததால், முதுகுவலி அதிகமாக இருக்கிறது. அப்பா அடிக்கடி கூறும், 'கல்வி தான் நம் இன்னல்களை உடைத்து, அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும்' என்ற வார்த்தை எனக்கு உந்துதலாக இருந்தது.
என்னுடைய இப்போதைய இலக்கு, பட்டப் படிப்பை முடித்து, ஐ.ஏ.எஸ்., ஆகி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; வாலிபால் விளையாட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments