Ad Code

Responsive Advertisement

பகல் 12 முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அறிவுரை

 




கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என்பது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்று (நேற்று) முதல் கத்திரி வெயில் தொடங்கி இருக்கிறது. 100 டிகிரி வெப்பத்தின் தாக்குதல் பொதுமக்களை பாதிக்கும் என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க துறைகளுக்கு வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோடைகாலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த வாகனத்தில் சென்றாலும், கோடைகாலம் முடியும் வரை கையில் தண்ணீர் பாட்டிலோடு போவது அவசியம்.


ஓ.ஆர்.எஸ் கரைச்சல், எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை வீட்டில் தயாரித்து சிறிய அளவு உப்பு சேர்த்து நீர்பானங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும். கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் சூழலில் வல்லுநர்கள், வெளிர் நிறங்களில் மெல்லிய ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என சொல்கிறார்கள். அதேபோல் வெயிலில் பயணிக்கும் போது முடிந்த அளவு தலையில் தொப்பி, துண்டு போன்றவற்றை அணிந்து தலையை மறைத்து செல்லவும். அதேபோல் கால்களில் செருப்பு இல்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியமாக இருந்தால் மட்டுமே 12 மணியில் இருந்து 3 மணி வரை வெளியில் வர வேண்டும்.


வேலை இல்லை என்றால் இந்த நேரத்தில் வீடுகளிலேயே இருப்பது நல்லது. அதேபோல் வெயில் காலத்தில் மது உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும். அதை அருந்துபவர்கள் கொஞ்ச காலத்திற்கு தியாகம் செய்ய வேண்டும். தேநீர், காபி போன்றவற்றையும் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.


கோடை வெப்பத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. ஏதாவது உடல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். வெப்பம் காரணமாக யாராவது மயக்கம் போட்டு விழுந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு பக்கெட் தண்ணீரை அவர்கள் மீது ஊற்ற வேண்டும். நிறைய பேர் கோடை வெயில் தாக்கத்தால் உயிரிழந்து இருக்கிறார்கள். சரும நோய்களும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே இவைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு இந்த எளிதான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறது.இவ்வாறு கூறினார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement